3 பாக்., பயங்கரவாதிகள் சர்வதேச பயங்கரவாதிகளாக அறிவிப்பு

Report
2Shares

லஷ்கர் - இ - தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவியதாக, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளை, சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருவதாக, இந்தியா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. பயங்கரவாதத்தில் ஈடுபட்டோர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் வலியுறுத்தி வருகிறது. பயங்கரவாதிகளின் புகலிடமாக பாகிஸ்தான் இருப்பதாகவும், பயங்கரவாதிகளை தூண்டிவிடுவதாகவும் புகார் கூறி வருகிறது.

'பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும், மூன்று பயங்கரவாதிகளை, சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இது குறித்து அமெரிக்காவின் அரசு கருவூலத் துறையின் உயரதிகாரி, சிகால் மன்டேல்கர் கூறியதாவது: லஷ்கர் - இ - தொய்பா, தலிபான் போன்ற பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள், ரஹ்மான் ஜெப் பகிர் முகமது, ஹிஸ்ப் உல்லாஹ் அஸ்லாம் கான், திலாவர் கான் நதிர் கான் ஆகியோரை, சர்வதேச பயங்கரவாதிகளாக அமெரிக்கா அறிவிக்கிறது. இதன்படி, இவர்களுக்கு உதவி செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்க முடியும். இந்த பயங்கரவாதிகளுடன் அமெரிக்க குடியுரிமை பெற்ற எவரும் எந்த்த தொடர்பும் வைத்திருக்கக் கூடாது. தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தும் வகையில், இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. இதற்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உதவ வேண்டும். இந்த பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளிப்பது, நிதி உதவி செய்வது போன்றவற்றை தடுத்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

135 total views