புதன்கிழமை முதல் வேலைநிறுத்தம்?

Report
2Shares

பஸ் கட்டணங்களை 20 சதவீதத்தால் உயர்த்துவதற்குச் சம்மதிக்காவிட்டால், அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சம்மேளனம், எதிர்வரும் புதன்கிழமை (16) நள்ளிரவு முதல், நாடாளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுமென, அச்சம்மேளனம் எச்சரித்துள்ளது.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அச்சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியன்ஜித், பஸ் கட்டணங்களை 20 சதவீதத்தால் உயர்த்துமாறும், குறைந்தபட்சக் கட்டணத்தை 10 ரூபாயிலிருந்து 15 ரூபாய்க்கு அதிகரிக்குமாறும், அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவித்தார்.

எரிபொருள் விலைகள் அண்மையில் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்தே இவ்வதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த அவர், தமது கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் தவறுமாயின், புதன்கிழமை நள்ளிரவு முதல், வேலைநிறுத்தம் இடம்பெறும் என எச்சரித்தார்.

முன்னதாக, இன்னொரு சங்கமான இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கும் போது, பஸ் கட்டணங்களை, குறைந்தபட்சம் 10 சதவீதத்தால் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகத் தெரிவித்திருந்தார்.

பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது எனத் தெரிவித்த அவர், குறைந்தபட்சக் கட்டணத்தை, 10 ரூபாயிலிருந்து 11 ரூபாயாக அதிகரிப்பதற்கு எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

623 total views