மட்டு விவசாயிகள் நவீன முறைகளைக் கையாள்வதே முன்னேற்றத்திக்கு வழி

Report
1Shares

விவசாயத்துறையில் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும், புதிய முறைகளையும் பயன்படுத்துவதற்கு விவசாயிகளைத் தயார்படுத்துவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் நல்லதொரு முன்னேற்றத்தினைக் கொடுக்கும் என்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் உணவு உற்பத்தி தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.

மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி சிறிகாந்த், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஆர். நெடுஞ்செழியன், உதவி மாவட்டச் செயலாளர் என். நவேஸ்வரன் உள்ளிட்டோர் இதில் பங்கு கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில், மட்டக்களப்பு ஒரு விவசாய மாவட்டமாகும். விவசாய சம்மேளனங்களை வருடத்தில் ஒரு தடவை மாத்திரம் சந்தித்துக் கலந்துரையாடுவதில் பிரயோசனம் இல்லை. அவர்களை அதிகாரிகள் வருடத்தில் இரண்டு தடவைகளாவது சந்தித்துக் கலந்துரையாடி அவர்களது பிரச்சனைகளை ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்தல் வேண்டும்.

இப்பொழுது மீள்வயற் பயிர்ச்செய்கை மிகவும் முக்கியமானதாகும். அது தொடர்பான செயற்பாடுகள் முன்னுரிமைப்படுத்தப்படவேண்டும். பனை உற்பத்தி மட்டக்களப்பில் சிறப்பாக இருப்பதாக கொழும்பில் நடைபெற்ற கூட்டங்களில் கலந்துரையாடினார்கள்.பனை பொருள் உற்பத்திகளை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கு முன்னெடுப்புக்கள் தேவை.

மாவட்டத்தில் உற்பத்தி செய்ய முடியாது என்ற கறுவா, ரம்புட்டான், மஞ்சள் போன்ற பயிர்கள் கூட தாந்தாமலை, வெல்லாவெளி, ஈரளக்குளம் போன்ற இடங்களில் நல்ல விளைச்சலைக் கொடுத்துள்ளது. இவ்வாறான விசேடமான விடயங்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயற்படுதல் மூலம் மாவட்டத்தின் உற்பத்தியினை மேம்படுத்த முடியும்.

நெல் உற்பத்தி மேற்கொள்ளப்படுகின்ற போது வறட்சி, வெள்ளம் என எல்லாவற்றிலும் பாதிப்புக்கள் ஏற்படுகின்றன. எனவே ஏனைய பயிர்ச்செய்கைகளுக்கும்; முன்னுரிமை வழங்கப்படவேண்டும். மேம்படுத்தல் திட்டத்தின் ஊடாக உற்பத்தியை உயர்த்திக் கொள்வது மாவட்டத்தில் விவசாயிகளது வாழ்வாதாரத்தினையும், பொருளாதாரத்தினையும் உயர்த்துவதற்கு உதவும்.

அத்துடன், விவசாயத்துறையில் தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும், புதிய வசதிகளையும் முறைகளையும் பயன்படுத்துவதற்கு விவசாயிகளைத் தயார்படுத்துவதும் அவர்களுக்கு வழிகாட்டுவதும் நல்லதொரு முன்னேற்றத்தினைக் கொடுக்கும் என்றார்.

நாட்டில் பயிரிட முடியுமான ஒவ்வொரு அங்குல நிலத்தினையும் பயிரிடச் செய்து தற்போது இறக்குமதி செய்யப்படுகின்ற ஆனால் உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியுமான உணவு வகைகளினால் நாட்டை தன்னிறைவடையச் செய்வதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் ஒரு கொள்கைக்கு அமைவாக இந்நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தேசிய உணவு உற்பத்தி மறுமலர்ச்சி விவசாய துறை மற்றும் அதனோடு இணைந்த அமைச்சுக்கள், திணைக்களங்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், அரச, தனியார் தொழில்முயற்சியாளர்கள் மற்றும் மாகாண சபைகளின் நேரடி பங்களிப்புடன் நாடு முழுவதும் இந்த செயற்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.

இக்கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், சுகாதார சேவை அதிகாரிகள், வைத்தியர்கள், விவசாயத்திணைக்கள உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக அதிகாரிகள், கல்வித் திணைக்கள உத்தியோயாகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

634 total views