நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்திருந்தால் பதவி விலகியிருப்பேன்: அர்ஜூன

Report
2Shares

பிரதமர் மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தால், தான் தொடர்ந்தும் அரசாங்கத்தில் அங்கம் வகித்திருக்க மாட்டேன் என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குருணாகல் வெலகெதர மைதானத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்துக்கொண்ட பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரும் தேவை கூட்டு எதிர்க்கட்சிக்கே இருந்தது. அது தோல்வியடைந்தது. அதற்கு ஆதரவளித்தவர்கள் பற்றி எனக்கு தெரியாது.

அதனை நான் ஆதரித்திருந்தால், ஆதரவாக வாக்களித்திருந்தால், அமைச்சரவையில் தொடர்ந்தும் இருக்க எனக்கு தார்மீக உரிமையில்லை. நான் அதனை ஆதரித்து, ஆதரவாக வாக்களித்திருந்தால், நிச்சயம் அமைச்சரவையில் இருக்க மாட்டேன். பதவியை ராஜினாமா செய்திருப்பேன்.

ஜனாதிபதியோ, பிரதமரோ கூறும் வரை பொறுத்திருக்க மாட்டேன். அதுதான் கொள்கையாக இருக்க வேண்டும். தவறுகள் நடந்தால், கட்டாயம் அது குறித்து பேசுவேன்.

உண்மையில் நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான விடயத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் சிக்கிக்கொண்டனர். அவர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தன் மூலம் ஜனாதிபதியை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ளனர். எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலம் எமது அரசாங்கம் பலமடைந்துள்ளது.

ஜனாதிபதியும் பிரதமரும் ஒன்றாக இணைந்து நாட்டில் மீதமுள்ள பணிகளை முன்னெடுக்க வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளாக திருடர்களை பிடிக்கவோ, மோசடியாளர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுக்கவோ முடியாமல் போனது. தற்போதாவது கண்களை திறந்து அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். அரசியல்வாதிகள் என்ற வகையில் நாம் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது. நீதிமன்றம் ஊடாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியது முக்கியம் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

504 total views