தாய் நாட்டுக்காக பணியாற்றும் படைவீர்களுக்கு அரசு அனைத்து வசதிகளையும் வழங்கும்

Report
1Shares

தாய் நாட்டுக்காக தமது கடமைகளை நிறைவேற்றும் படைவீரர்களுக்கு அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வெளியேறும் நிகழ்வு இன்று (09) முற்பகல் முப்படைகளின் தளபதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

மாதுரு ஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் 48 ஆவது ஆரம்ப பயிற்சிப் பாடநெறியை பயின்ற ஏழு அதிகாரிகளும் ஏனைய பதவி நிலைகளைச் சேர்ந்த 189 பேரும் பயிற்சிகளை நிறைவுசெய்து வெளியேறினர்.

பேண்ட் வாத்தியம், பரசூட் கண்காட்சிகள் என்பனவற்றுடன் மிகச் சிறப்பாக இடம்பெற்ற இந் நிகழ்வில் சிறந்த மாணவர் மற்றும் திறமையான உடற்பயிற்சி மாணவராக இரண்டாவது லெப்டினன் டபிள்யுயூ எம் கே ஆர் வணிகசூரிய மற்றும் சிறந்த குறிபார்த்துச் சுடும் வீரராக லெப்டினன் ஈ எம் பி டி ஏக்கநாயக்க ஆகியோர் ஜனாதிபதியிடமிருந்து விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, பாதுகாப்புப்படை தமது சேவைகளை நிறைவேற்றும் போது ஆயுதங்களினால் மட்டுமன்றி அறிவு, இயலுமை, ஆக்கத்திறன் என்பவற்றினாலும் பலம்பெற்று அவர்களது திறமைகளை வெளிக்காட்ட வேண்டும் என்று தெரிவித்தார். இதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் சலுகைகளையும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதியின் வருகையை நினைவுகூறும் முகமாக மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலை வளாகத்தில் ஜனாதிபதி நாக மரக்கன்று ஒன்றை நாட்டியதுடன், அங்குள்ள மூலிகைப் பூங்காவையும் பார்வையிட்டார்.

பாதுகாப்புச் செயலாளர் கபில வைத்தியரத்ன, பாதுகாப்பு பணிக்குழாம் பிரதானி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, மாதுருஓய இராணுவ பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதி கேர்ணல் எம் ரி யு மகலேக்கம் ஆகியோர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரதானிகள் இந்த நிகழ்வில் கலந்து கெண்டனர்.

அதனைத் தொடர;ந்து மாதுரு ஓய மீனவர் கிராமத்திலுள்ள கத்தோலிக்க தேவாலயத்தின் புதிய கட்டிடத்தை திறந்துவைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்து கொண்டார். ‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் சமயஸ்தாபனங்களை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்திற்கேற்ப சுமார் 60 லட்சம் ரூபா செலவில் இக்கட்டிடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

மீனவர் கிராமத்திலுள்ள மக்களின் வீட்டுப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நிகழ்ச்சித் திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும் அப்பிரதேசத்திலுள்ள பிள்ளைகளின் கல்வி சுகாதாரப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய தேவைகளையும் கண்டறிந்து நிறைவேற்றிக் கொடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். பிரதேசத்தின் சமயத்தலைவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

437 total views