கிழக்கு மாகாணச் சேவைகள் பாதிப்பு!

Report
2Shares

வவுனியாவில் அமைந்துள்ள, இலங்கைப் போக்குவரத்துக்கச் சொந்தமான பழைய பேருந்து நிலையத்தை தனியாருக்கு தாரை வார்த்துக் கொடுத்ததன் மூலம், கிழக்கு மாகாணத்திலிருந்து வடக்குக்கான சேவைகளை மேற்கொள்ளும் இலங்கைப் போக்குவரத்துச் சபை பேருந்து சேவைகளும் பாதிப்படைந்துள்ளதாக, சிறிலங்கா சுதந்திர தேசிய போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

வவுனியா பேருந்து தரிப்பிட விவகாரத்தால் கிழக்கு மாகாணச் சேவைகள் பாதிப்பு!


இது தொடர்பாக அந்தச் சங்கம் ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக அதன் உப தலைவர் எம்.ஐ.லாபீர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாகக் கலந்துரையாடல் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் அடங்கிய மகஜரொன்றை, இன்று (10.01.2018) ஜனாதிபதி, பிரதம மந்திரி மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஆகியோருக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.


இது பற்றி மேலும் கூறிய அவர், வவுனியா பழைய இ.போ.ச பேருந்து நிலைய விவகாரம் சம்பந்தமாக, வடக்கு மாகாண இ.போ.ச வினருடன் சேர்ந்து, கிழக்கு மாகாண இ.போச பேருந்து ஊழியர்களும் இணைந்து, ஆதரவு தெரிவிக்கத் தீர்மானித்துள்ளோம்.


அதன் காரணமாக, எமது சிறிலங்கா சுதந்திர தேசிய போக்குவரத்து ஊழியர் சங்கம் பின்வரும் விடயங்களைக் கவனத்தில் எடுத்து நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளது.


வவுனியா நகர மத்தியில் இதுவரை காலமும் இலங்கைப் போக்குவரத்துச் சபையால் பாவனைக்குட்படுத்தப்பட்டு வந்துள்ள எமது பழைய பஸ் நிலையம் வடக்கு முதலமைச்சரின் தலையீட்டால் தனியார் வசமாகியுள்ளது. இதனால், இ.போ.ச பஸ் சேவைகளை நம்பியிருக்கும் பயணிகள் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.


எனவே, வடக்கு முதலமைச்சரின் தலையீட்டைத் தடுத்து நிறுத்தி எமது பழைய பஸ் நிலையத்தை இபோச வினருக்கே மீளப் பெற்றுத் தர வேண்டும்.


அந்தப் பகுதியில் இ.போ.ச பஸ் சாரதிகள், நடத்துனர்கள், பயணிகள் மற்றும் பஸ்கள் மீது நடாத்தப்படும் கண்மூடித்தனமான தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.


இ.போ.ச பஸ் சேவைகளை முடக்குவதற்காக பல சூட்சுமங்கள் கையாளப்படுகின்றன. அதில், குறைந்த கட்டணங்கள் அறிவிடப்படுவதும் இடம்பெறுகின்றது. மண்ணெண்ணெய் கலந்து எரிபொருள் பாவிப்பதன் மூலம் எரிபொருள் செலவை மீதப்படுத்தி குறைந்த கட்டணங்கள் அறவிடப்படுகின்றன.


இது போக்குவரத்து ஒழுங்கு விதிகளை மீறும் செயலாகும். எனவே இவற்றைக் கவனத்தில் எடுத்து இ.போ.ச பஸ் சேவைகளை மேம்படுத்தவும் இ.போ.ச பஸ் சேவைகளை நம்பியிருக்கும் பயணிகளைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

936 total views