கூட்டமைப்புடன் பேசிய பின்னரே வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது: சுமந்திரன்

Report
1Shares

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கலந்தாலோசித்த பின்னரே நிதி அமைச்சரால் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளரருமான எம். எ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழக்கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ”எம்முடன் கலந்து பேசியே நிதி அமைச்சரால் வரவு செலவுத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. நாங்கள் முன்வைத்த ஆலோசனைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கு மேலாக நிதி அமைச்சரை நானும் தலைவர் சம்பந்தன் அவர்களும் சந்தித்து இந்த வரவு செலவு திட்டம் யோசனைகள் குறித்து பேசியிருந்தோம்.

நாங்கள் முன்வைத்த அநேகமான எல்லா யோசனைகளும் இதிலே உள் வாங்கப்பட்டிருக்கின்றது. இந்த வரவு செலவு திட்டத்தை பார்கின்றபோது, ஐம்பதாயிரம் கல்வீடு அமைப்பதற்கு நிதி உடனடியாக ஒதுக்கப்பட்டிருகின்றது.

முன்னாள் போராளிகளுக்கு வேலைவாய்ப்பு சம்பந்தமாக இரண்டு முக்கியமான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. பெண் தலைமை தாங்குகின்ற குடும்பங்களுக்கு மற்றும் மாற்று திறனுள்ள பெண்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்களுக்கு நிதி ஒதுக்கீடு பெரியளவிலே இல்லா விட்டாலும் ஒரு நல்லிணக்கத்திற்கான பார்வையோடு யோசித்து பல முன்மொழிவுகள் வைக்கப்படிருக்கின்றன.

ஆனால் எல்லாவற்றையும் விட காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை இயக்குவதற்கான 140கோடி அடுத்த ஜனவரி மாதத்திலிருந்தே ஒதுக்கப்படிருகின்றது.

அப்படியான ஒரு அலுவலகம் சரியான முறையிலே இயங்குவதற்கு தேவையானளவு பணம் இதிலே அடங்குகின்றது என்பதனை நாங்கள் காணக்கூடியதாக இருக்கிறது.

இப்பொழுது அந்த ஏழு ஆணையாளர்களையும் நியமிக்கின்ற விடயத்தை அரசியல் அமைப்பு சபை நடவடிக்கை எடுத்திருக்கின்றது. பலர் விண்ணப்பித்திருக்கின்றார்கள். வெகு விரைவாக அந்த நியமனம் நடக்கும்.

பணமும் பெருமளவிலே ஒதுக்கப்படிருகின்ற காரணத்தினால் வெகு விரைவாக நடைபெறும் என நான் கருதுகின்றேன்” என்றார்.

563 total views