கிழக்கில் ஹக்கீமுக்கும் மலையகத்தில் தொண்டாவுக்கும் பலப்பரீட்சை

Report
2Shares

1சு.கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை தனது கையிலெடுக்கும் மைத்திரி

தேர்தல்; பரப்புரைக்காக இன்று மொட்டுக்கள் மேடையில் ஏறும் மஹிந்த

ஐதேக தலைமையை மருமகனுக்கு வழங்கும் நிகழ்ச்சி நிரலில் ரணில்

இன்று வன்னியில் கூடி தேர்தல் வியூகம் வகுக்கும் தமிழரசுக்காரர்கள்

கிழக்கில் ஹக்கீமுக்கும் மலையகத்தில் தொண்டாவுக்கும் பலப்பரீட்சை

‘தேர்தல் அறிவிப்பு வந்து அந்த ஜூரம் மக்களிடத்தில் கடுமையாக பீடித்திருக்கும் நேரத்தில் அரசிலிருந்து சிலர் ஒரு பாய்ச்சலை செய்து அதன் மூலம் மைத்திரிக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்க்கும் ஒரு ஏற்பாடும் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது என்ற தகவலையும் முன் கூட்டியே நமது வாசகர்களுக்குத் தருகின்றோம்.’

மேற்சொன்ன இந்தக் குறிப்பு நாம் கடந்த 5.11.2017 ஞாயிறு தினக்குரல் வார ஏட்டடில் சொல்லி இருந்த செய்தி.

புகழ்பெற்ற அரசியல் வார ஏடான ராவய இந்த (12.11.2017) வாரம், நாம் கடந்த வாரம் சொல்லிய செய்தியைக் குறிப்பிட்டு முன்பக்கச் செய்தியை சொல்லி இருக்கின்றது. இப்படி இந்த இருக்கமான நேரத்தில் மைத்திரிக்கு தலையிடி கொடுக்க இருப்பவர்கள் பற்றியும் இப்போது நாம் இங்கு ஒரு குறிப்பை பதிந்து வைக்க விரும்புகின்றோம்.

மஹிந்தவுடன் இணைந்தே நாம் தேர்தலுக்கு செல்ல வேண்டும் என்று அழுத்தம் கொடுத்த இரு அமைச்சர்களும் பிரதி அமைச்சர்கள் மூவரும்தான் இந்த வேலையைப் பார்க்க இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது.

இவர்கள் இன்று அனுராதபுர சல்காது அரங்கில் பேரணியில் இணைந்து கொள்ள இருக்கின்றார்கள் என்று கூட்டு எதிரணி சார்பில் செயலாற்றுகின்ற ஒரு முஸ்லிம் அரசியல்வாதி எமக்கு தகவல் தந்திருக்கின்றார். அது எந்தளவுக்கு உண்மை என்பது இன்று மாலை தெரிந்து விடும்.

அது எப்படி இருந்தாலும் நிச்சயம் குரங்கின் வேலை நடைபெற இருப்பது மட்டும் உறுதி. இது இன்றா நாளையா என்பது தெரியாது. கட்டம் கட்டமாக இந்தத் தாவல்களை நடாத்தி மைத்திரிக்கு அதிர்ச்சியைக் கொடுங்கள் என்று மஹிந்த அவர்களுக்கு ஆலோசனை சொல்லி இருக்கின்றார் என்று அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

தேர்தல் இன்று நாளை என்று இரண்டு வருடங்களுக்கு மேல் இழுத்தடித்த நிலையில் இப்போது அதற்கான வர்த்தமானி அறிவித்தலை இலங்கை அச்சகக் கூட்டுத்தாபனத்திற்கு அனுப்பி வைத்திருந்தார் துறைக்குப் பொறுப்பான அமைச்சர்.

அரசியல் ஆர்வலர்கள் இந்த வர்த்தமானி அறிவித்தலைப் பார்க்க ஆர்வமாக இருக்கின்ற நிலையில் தேர்தல் வரவைப்போல் அதுவும் தாமதமாகிக் கொண்டிருக்கின்றது. இப்படி அந்த வர்த்தமானி அறிவிப்பு வெளிவரத் தாமதமானால் 2018 ஜனவரியில் கட்டாயம் தேர்தல் என்று அமைச்சரின் கூற்று வழக்கம்போல் போலியாகும்.

அமைச்சர் கடந்த முதலாம் திகதி இந்த வர்த்தமானி அறிவித்தலில் கையெழுத்துப் போட்டு அச்சகக் கூட்டுத்தாபனத்தில் கையளித்திருந்தார். ஆனால் அந்த வர்த்தமானி அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஏன் இது இன்னும் மக்கள் பார்வைக்கு வரவில்லை என்று நாம் தேடிப்பார்த்தால் மொழிபெயர்ப்பில் உள்ள குறைபாடுகள் காரணமாக அதனை மக்கள் மயப்படுத்த முடியாத நிலை என்று தெரிகின்றது. தற்போதுதான் இது ஒப்பு நோக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது என்று அச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதிலுள்ள அடுத்த வேடிக்கை என்னவென்றால் நுவரெலிய மாவட்டத்தில் புதிய உள்ளுராட்சி சபைகளுக்கும் பொலன்னறுவையில் இரு இடங்களுக்குமான 10 ப் பக்கங்களுக்கும் குறைவான வர்த்தமானி அறிவிப்பு. இந்த கட்டுரையைத் தயாரிக்கின்ற நேரத்தில் வெளிவந்திருக்கின்றது. அதுவும் ஆங்கில, சிங்கள மொழிபெயர்ப்புக்கள் மட்டும்தான் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது. அங்கே தமிழ் மொழிபெயர்ப்பைக் காணவில்லை.

ஒரு பத்துப் பக்கத்தைக்கூட ஒரே நேரத்தில் இந்த அரசாங்கத்தால் தமிழாக்கம் செய்ய முடியாத நிலை என்றால் தமிழுக்கு சமஉரிமை என்ற கதையும் அமைச்சர் மனோ கணேசனது அமைச்சும் தேவைதானா என்று கேட்க வேண்டி இருக்கின்றது. இதுவும் ஒரு மனித உரிமையைப் பாதிக்கின்ற விவகாரமாக நாம் எடுத்துக் கொள்ள முடியும்.

எனவே அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்குமான உறுப்புரிமை தொடர்பான பெரும் தொகையான பக்கங்களடங்கிய வர்த்தமானி அறிவிப்பு வெளிவந்து, அதற்கான தமிழாக்கம் தேர்தல் முடிந்த பின்னர் வெளிவந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இதுதான் தமிழ் மொழிக்கு உள்ள சம அந்தஷ்த்து.! சிறுபான்மை இனத்துக்குள்ள அங்கிகாரம்! என்று நாம் கருத முடியும்.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய வர்த்தமானி அறிவித்தல் தாமதமாவது பற்றி அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தின் அதிபர் கங்கானி லியனகேயை தனது காரியாலயத்திற்கு அழைத்து விளக்கம் கேட்டிருக்கின்றார். அமைச்சர் ஒரு சீடியைத் தான் எங்களுக்கு கையளித்திருந்தார். அதனை நாம் மொழிபெயர்ப்புகள் செய்து மீண்டும் அவரது அமைச்சுக்கே அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அவர்கள் அவற்றை ஒப்பு நோக்கி எமக்கு அனுப்பிய பின்னர்தான் நாம் அச்சேற்றம் செய்ய முடியும். அவர்கள் அதனை முதலில் மும் மொழிகளிலும் தயாரித்து அனுப்பி இருந்தால் என்றோ இது அச்சுக்குப்போய் இருக்கும் என்றார் அச்சக அதிபர் கங்கானி லியனகே.

இந்த விளக்கத்தைப் பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்னும் ஒரு வாரத்துக்குள் அந்தப் பணி நடக்கவில்லை என்றால் ஜனவரியில் தேர்தல் என்ற கதை நடக்க வாய்ப்பில்லை என்று அவர் அங்கு குறிப்பிட்டிருக்கின்றார். எனவே அமைச்சர் அவசரத்தில் அரை குறையாக இந்த வேலையை செய்து அச்சகத்தில் கையளித்திருப்பது இதன் மூலம் தெரிய வருகின்றது. எனவே வர்த்தமானி வெளிவந்தாலும் அதில் தவறுகள் இருக்கலாம் என்று எமக்கு எண்ண முடிகின்றது.

இந்தத் தாமதம் குறித்து நாம் அச்சக அதிபரிடம் வியாழன் தொடர்பு கொண்ட போது அவரது உதவியாளர் ஒருவர் எங்களிடத்தில் இப்படி ஒரு கதையைச் சொன்னார். திங்கள் 13ம் திகதி அளவில் சிங்கள, ஆங்கில மொழிகளில் இதனை நாம் வெளியிடலாம் என்று கருதுகின்றோம். ஆனால் தமிழ் மொழியில் இது அச்சக இன்னும் பல நாட்கள் எடுக்கும் என்று அவர் எங்களிடத்தில் குறிப்பிட்டார்.

சுதந்திரக் கட்சித் தேர்தல் பிரச்சாரப் பணிகளை நேரடியாக மைத்திரி தனது கண்காணிப்பில் எடுத்துக் கொள்ள இருக்கின்றார். மஹிந்த ராஜபக்ஷவை வீட்டுக்கு அனுப்பிவைக்க மைத்திரிக்கு சிறுபான்மை சமூகத்தினர் 90 சதவீதத்திற்கு மேற்பட்ட ஆதரவைக் கொடுத்தார்கள்.

வடக்கு கிழக்கில் இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் பிரதான பேரினக் கட்சிகள் பெரிதாக சாதிக்கப்போவதில்லை. அங்கே தமிழ் முஸ்லிம் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். மலையத்தில் முற்போக்கு கூட்டும், தொழிலாளர் காங்கிரசும் ஆதிக்கம் செலுத்தும். சிதறி இருக்கின்ற சிறுபான்மை சமூகத்தின் வாக்குகளை தன் பக்கம் ஈர்த்துக் கொள்ள மைத்திரி தலைமையிலான சுதந்திரக் கட்சி எந்த நடவடிக்கைகளையும் மேற் கொள்ளவில்லை என்பதனை அவதானிக்க முடிகின்றது.

ஜனாதிபதி மைத்திரி தொடர்பில் சிதறி வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் உள்ள நல்லெண்ணத்தை வைத்து, அவர்களது ஆதரவைப் பெற்றுக் கொள்ள நல்ல வாய்ப்புக்கள் பிரகாசமாக இருந்தும் அது பற்றி சுதந்திரக் கட்சி சிந்திக்காமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை.

அந்தக் கட்சியிலுள்ள தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இது விடயத்தில் எந்த உறுப்படியான முயற்சிகளையும் எடுக்கவில்லை என்பதனை, சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரி மற்றும் அந்தக் கட்சியிலுள்ள முக்கியஸ்தர்கள் எந்தளவுக்கு அவதானித்துக் கொண்டிருக்கின்றார்களோ தெரியவில்லை. இந்த வாக்குகள் ஒருபோதும் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கின்ற மொட்டுக்காரர்களுக்குப் போகாது. என்றாலும் சிறுபான்னை ஆதரவைப் பெற்றுக் கொள்கின்ற கடினமான முயற்சியில் அந்தக் கட்சி நடவடிக்கைகளை நெறிப்படுத்துகின்ற பசில் மேற் கொண்டு வருகின்றார் என்பதனை அவதானிக்க முடிகின்றது.

அதே நேரம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிறுபான்மை சமூகத்தினர் வழக்கமாக வாக்களித்து இப்போது போதும் என்ற நிலையில், மாற்றமாக சிந்திப்பதைப் பல இடங்களில் பார்க்க முடிகின்றது. நாம் முன்பொருமுறை சொன்னது போன்று இந்த முறை ஜேவிபி தனது வேட்பாளர் தெரிவில் வழக்கமாக கடைபிடிக்கின்ற இருக்கமான பிடியைத் தளர்த்தி சிறுபான்மை மக்களுக்கு அவர்கள் பெருவாரியாக வாழ்கின்ற இடங்களில் போட்டியிடுவதற்கு வாய்பைக் கொடுக்க முயற்சிப்பது தெரிகின்;றது.

குறிப்பாக கிழக்கிற்கு வெளியே முஸ்லிம்கள் ஜேவிபி ஊடாக தேர்தலில் களமிறங்குவதற்கு ஆர்வமாக இருப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு இனவாதிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்களுக்குக் கொடுத்த நெருக்கடிகளின் போது அவர்கள் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஆஜரானதும் முக்கிய காரணமாக இருக்க வேண்டும் என்று கருதலாம்.

சிறுபான்மைக் கட்சிகள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து களமிறங்குவதால் பல இடங்களில் ஐக்கிய தேசியக் கட்சிக்காரர்கள் குறிப்பாக முன்னாள் உறுப்பினர்கள் கூட ஓரம்கட்டப்பட்டிருக்கின்றார்கள். அவ்வாறானவர்கள் மாற்று அணிகளில் அல்லது சுயேட்சையாக தேர்தல் களத்திற்கு வரும் முயற்சிகளும் ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கின்றது.

தேர்தல் பிரச்சாரத்திற்கு 60 நாட்களுக்கு குறையாமல் ஒதுக்க வேண்டி இருக்கின்றது. எனவே இந்த வர்த்தமானி அறிவிப்பு தாமதமானால் ஜனவரியில் தேர்தல் என்ற அறிவிப்பு எந்தளவு சாத்தியமாகப்போகின்றது.

மேலும் பாதாள உலகத்தை சேர்ந்தவர்கள் பிரதான கட்சிகளில் வேட்பாளர்களாக வருவதற்கும் முயன்று கொண்டிருக்கின்றார்கள். இந்த நேரத்தில் கூட அவ்வாறான பெருந்தொகையானவர்களுக்கு முக்கிய கட்சிகளில் வாய்ப்பு உறுதி என்ற நிலை காணப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியில் தற்போது சர்ச்சைக்குள்ளாகி இருக்கின்ற ரவி கருனாநாயக்காவின் ஆதிக்கம் வேட்பாளர் தெரிவில் மேலோங்கி இருப்பது கட்சியில் பலருக்கு பிடிக்காமல் இருக்கின்றது.

இன்று அனுராதபுரத்திலுள்ள சல்காது மைதானத்தில் மொட்டுக்கள் அணியினர் தனது முதலாவது கன்னித் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கின்றார்கள். இந்த மேடையில் மஹிந்த ராஜபக்ஷ ஏறுகின்றார் என்று சொல்லப்படுகின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தல் தொடர்பான சந்திப்பை இந்த கட்டுரையை வாசகர்கள் படிக்கின்ற நேரத்தில் வன்னியில் நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டமைப்பிலிருந்து பலர் வெளியேறுவதும் புதிய கூட்டுக்கள் பற்றிய முயற்சிகளும் வடக்கு கிழக்கில் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இதற்கிடையில் அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட விஜேதாச ராஜபக்ஷ பிரதமர் ரணிலைக் கடுமையாக சாடி வருகின்றார். தனது மாமனார் ஜே.ஆர். ரணிலுக்குத் தலைமைப் பதவியை கொடுத்தது போல் ரணிலும் அவரது மருமகனுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியைக் கையளிக்கின்ற நிகழ்ச்சி நிரலில் காரியம் பார்த்துக் கொண்டிருக்கின்றார் என்று அவர் குற்றம் சாட்டுகின்றார்.

நாட்டின் தலைவிதியையும் பலரது அரசியல் எதிர்காலத்தையும் இந்தத் தேர்தல் தீர்மானிக்க இருக்கின்றது. மைத்திரி, ரணில், மஹிந்த, சம்பந்தன், ஹக்கீம், தொண்டா, என்ற நீண்ட பட்டியல் இதில் அடங்குகின்றது.

492 total views