துப்பாக்கி முனையில் இளைஞரை கடத்த முயற்சி

Report
13Shares

வவுனியாவில் இளைஞர் ஒருவரை துப்பாக்கி முனையில் கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்று முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வவுனியா நகரப்பகுதியில் உள்ள வாடி வீட்டிற்கு முன்பாக இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் வட மாகாண அமைப்பாளர் பொன்னுத்துரை அரவிந்தனின் வீட்டிற்கு முன்பாக சந்தேகத்திற்கிடமான வாகனங்களின் நடமாட்டம் இருந்துள்ளது.

இதனை அவதானித்த அவர் சுதாகரித்துக் கொண்டதுடன், தனது வாகனத்தில் நண்பரை அனுப்பி விட்டு தான் பிறிதொரு வாகனத்தில் நண்பரின் பின்னால் வவுனியா நகர் நோக்கி சென்றுள்ளார்.

இதன்போது வவுனியா, புகையிரத நிலைய வீதியில் குறித்த வாகனம் சென்ற போது மூன்று வாகனங்களில் வந்த குழு அவரது நண்பரை வழிமறித்து துப்பாக்கி முனையில் கடத்த முற்பட்டுள்ளனர்.

இதன்போது, பின்னால் வந்த பொன்னுத்துரை அரவிந்தன் மற்றும் அவரது நண்பர் ஆகிய இருவரும் சுதாகரித்துக் கொண்டு, அயலில் நின்ற இளைஞர்களின் உதவியுடன் துப்பாக்கி வைத்திருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அத்துடன், 3 பேரை மடக்கி பிடித்துள்ளதுடன், அவர்கள் பயணித்த கார் ஒன்றினையும் கைப்பற்றியுள்ளனர். இதன்போது கடத்தல் முயற்சியில் ஈடுபட முனைந்த ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

விடயம் தொடர்பில் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வவுனியா பொலிஸார் வாகனத்தை கைப்பற்றியுள்ளதுடன், பிடிக்கப்பட்ட மூவரையும் கைது செய்ததுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

653 total views