மாற்று உற்பத்திகளால் கூரைஓடு விற்பனைக்கு பாதிப்பு

advertisement

மாற்று உற்பத்திகள் மற்றும் வெளிநாட்டு உற்பத்திகள் காரணமாக கூரைஓடுகளை விற்பனை செய்ய முடியாத நிலைமை காணப்படுவதாக அகில இலங்கை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம் ஜனாதிபதியிடம் முறைப்பாடு செய்துள்ளது.

அகில இலங்கை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இலங்கை காலணி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துக் கலந்துரையாடினார். இதன்போதே அவர்கள் இதனைத் தெரிவித்தனர்.

மேலும் தமக்குத் தேவையான களியைப் பெற்றுக்கொள்வதில் உள்ள சிரமங்கள் தொடர்பிலும் ஓடு உற்பத்தியாளர்கள் ஜனாதிபதிக்குத் தெளிவுபடுத்திய அதேவேளை,வெளிநாட்டு உற்பத்திகள் காரணமாக தமது தொழிற்துறை முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் எடுத்துக்கூறினர்.

இதன்போது குறித்த பிரச்சினைகளுக்கு வழங்கக்கூடிய நிவாரணங்கள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணான்டோபுள்ளே, முன்னாள் சிரேஷ்ட அமைச்சர் மில்ரோய் பெர்ணான்டோ, தொடர்புடைய அமைச்சுகளின் அலுவலர்கள் மற்றும் அகில இலங்கை ஓடு உற்பத்தியாளர்கள் சங்கம், அகில இலங்கை காலணி உற்பத்தியாளர்கள் சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடலில் பங்குபற்றினர்.