அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவி விலகினார்

Report
7Shares

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க பதவியில் இருந்து விலகுவதாக நாடாளுமன்றத்தில் இன்று அறிவித்துள்ளார்.

மத்திய வங்கி பிணைமுறி விற்பனை சர்ச்சையில் சிக்கியிருந்த வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, இன்று பிற்பகல் 1.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் சிறப்பு உரை ஒன்றை ஆற்றினார்.

இதன் போதே அவர், வெளிவிவகார அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகிக் கொள்ள எடுத்துள்ள முடிவு பற்றி அறிவித்தார்.

தாம் இந்த முடிவை அழுத்தங்களினாலோ, வருத்தத்துடனோ எடுக்கவில்லை என்றும் பெருமையுடனேயே எடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக சொத்துக்களை சேர்க்க வேண்டிய தேவை தமக்கு இல்லை என்றும், தமக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்றும் அவர் கூறினார்.

“என்னிடம் உள்ள செல்வம் பற்றி அனைவருக்கும் தெரியும். எனது கட்சியைச் சேர்ந்தவர்களும் ஏனையவர்களும் எனது வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.

நான் அரசியலுக்காக அவற்றைப் பயன்படுத்தியதில்லை என்று அவர்களுக்குத் தெரியும். முன்னரைப் போன்றில்லாமல், அமைச்சர்களை விசாரிக்க சட்டமா அதிபருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தமது விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

ஜனநாயகம், நல்லாட்சிக்காக எனது பதவியை துறக்கிறேன். இந்த முடிவை எடுப்பதற்காக நான் பெருமைப்படுகிறேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

உரையாற்றி முடித்தவுடன், ரவி கருணாநாயக்க நாடாளுமன்றத்தில் பின்வரிசையில் அமர்ந்து கொண்டார்.

721 total views