கலாவிடம் வாக்குமூலம் பெற சபாநாயகரிடம் வேண்டுகை முன்வைத்தது பொலிஸ்

Report
20Shares
advertisement

சுவிஸ்குமார் தப்பிக்க உதவிய குற்றச்சாட்டுத் தொடர்பிலான வழக்கு விசாரணையில் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பி னர் ஒருவரிடமும் வாக்குமூலம் பெறுவதற்கான அனுமதி சபாநாயகரிடம் கோரப்பட்டுள்ளது.

அனுமதி கிடைத்ததும் அவர்களிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் நேற்று அறிவித்தார். இந்த வழக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம். றியாழ் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் மற்றும் சந்தேகநபரான மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க சார்பில் மூன்று சட்டத்தரணிகள் மன்றில் முன்னிலையாகினர். சந்தேகநபர் மன்றில் முற்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணைகள் ஆரம்பமானது.

சுவிஸ்குமாரை

சிறிகஜன் தடுத்து

வைத்திருந்தார்

“அந்தக்காலப் பகுதியில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் இரானிடம் புங்குடுதீவு மாணவி கொலை வழக்கின் முதன்மைச் சந்தேகநபரான சுவிஸ்குமார் என அழைக்கப்படும் மகாலிங்கம் சசிக்குமார் என்பவரை கைது செய்ய வேண்டும் எனவும், அவர் வெளிநாடு தப்பிச் செல்ல முடியாதவாறு கட்டுநாயக்க வானூர்தி நிலையப் பொலிஸாருக்கு தகவல் வழங்க வேண்டும் என சந்தேகநபரான மூத்த பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டவர்.

சுவிஸ்குமார் என்பவரை தேடப்படும் சந்தேகநபராகக் குறிப்பிட்டு அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியவர்தான் லலித் ஏ ஜெயசிங்க . அந்தக் காலப் பகுதியில் யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகரான சிறிகஜன் என்பவரே சுவிஸ்குமார் என்பவரை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தார்.

காணொலி தொடர்பில்

இரண்டு வருடமாக ஏன்

விசாரணை நடத்தவில்லை?

அந்தக்கால பகுதியில் பிரதி அமைச்சராக இருந்த விஜயகலா மகேஸ்வரன் சுவிஸ்குமார் என்பவரை பொது மக்கள் பிடித்து வைத்து இருந்த இடத்துக்கு சென்றிருந்தார். அது தொடர்பான காணொலிகள் இணையங்களில் கடந்த இரண்டு வருட காலமாக உள்ளன. அவை பற்றி குற்றபுலனாய்வு துறையினர் இதுவரை விசாரணைகளை முன்னெடுக்கவில்லை.

அதேவேளை லலித் ஏ ஜெயசிங்க கடந்த இரண்டு வருடங்களில் வெளிநாடுகள் சென்று வந்துள்ளார். தப்பிச் செல்ல விரும்பியிருந்தால் அவர் வெளிநாடுகளில் தங்கியிருந்திருக்க முடியும். அது மட்டுமின்றி குற்றபுலனாய்வுத் துறையினர் வாக்குமூலம் பெற அழைத்த போதிலும் தாம் கைது செய்யப்படலாம் எனத் தெரிந்திருந்தும் அவர் வாக்குமூலம் வழங்கச் சென்றிருந்தார்.

எனவே லலித் ஏ ஜெயசிங்க மீது குற்றச்சாட்டுக்கள் இல்லாத காரணத்தால், அவரைப் பிணையில் விடுவிக்க வேண்டும்” என்று அவர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் மன்றில் விண்ணப்பம் செய்தனர். சந்தேகநபரின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்துக்கு கடும் ஆட்சேபனையை அரச சட்டவாதி நாகரத்தினம் நிஷாந்த் தெரிவித்தார்.

சுவிஸ்குமார்

advertisement

தப்பிச்செல்ல

வைக்கப்பட்டார்

“புங்குடுதீவு மாணவி கொலை வழக்குடன் தொடர்புடைய 9ஆவது எதிரி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றார் என்பதனைவிட தப்பிச் செல்ல வைக்கப்பட்டார் என்பதே சரியான வார்த்தை ஆகும் என நினைக்கிறன்.

சுவிஸ்குமார் தப்பிச் செல்ல வைத்தவர் அந்தக் காலப் பகுதியில் வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஏ ஜெயசிங்க எனும் இந்தச் சந்தேகநபர் என நியாயமான சந்தேகத்தால், அவர் மாணவி கொலை வழக்கில் தலையீடு செய்யக் கூடிய சந்தர்ப்பம் இருக்கலாம் எனும் காரணத்தால் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்திலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டார்.

சுவிஸ்குமார் தப்பிச் செல்ல வைக்கப்பட்டமைக்கு உதவினார் என இந்த வழக்கின் சந்தேகநபர் மீது நியாயமான சந்தேகம் எழுந்தமையால், அவரை நீதிமன்றில் முற்படுத்தில் வாக்குமூலம் பெற்று சாட்சியங்களைப் பெறுமாறு 2017ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி சட்டமா அதிபர் கடிதம் மூலம் குற்றபுலனாய்வு துறையினருக்கு ஆலோசனை வழங்கினார்.

எனவே இந்த வழக்கில் சந்தேகநபராக உள்ளவர் குற்றபகிர்வுப் பத்திரம் தாக்க செய்யப்படுவதற்கு நியாமான சந்தேகம் உள்ளதாலும், இந்த வழக்குத் தொடர்பில், சாட்சியங்கள், ஆதாரங்களில் தலையீடு செய்வதற்கு உரிய நியாயமான சந்தேகம் உள்ளமையாலும் இவரை கைது செய்து குற்றப் புலனாய்வு துறையினர் நீதிமன்றில் முற்படுத்தியுள்ளனர்.

விளக்கமறியல் காலம்

தண்டனை காலமல்ல

அத்துடன் இந்தச் சந்தேகநபர் இலங்கை பொலிஸ் தர வரிசையில், நான்காம் கட்ட அதிகாரிகளுக்குள் ஒருவர். எனவே சாட்சியங்களில் அவரின் தலையீடு இருக்கும். இந்த வழக்குத் தொடர்பில் பொலிஸ் சாட்சியங்களும், சிவில் சாட்சியங்களும் உண்டு. அந்தச் சாட்சியங்களின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

விளக்கமறியல் காலத்தை தண்டனை காலமாக கருத்தாது, விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும், சமூகத்தில் இருந்து ஒதுங்கி இருப்பதற்காகவும், சாட்சி ஆதாரங்களில் தலையீடு செய்யாமல் இருப்பதற்காகவுமானா காலப் பகுதியாக கருதலாம்.

புதிய சாட்சியங்கள்

இணைக்கப்படும்

கடந்த தவணையின் போது மன்றினால் இடப்பட்ட கட்டளைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதேவேளை இந்த வழக்கில் மேலும் சாட்சியங்கள் ஆதாரங்கள் சட்டமா அதிபரால் புதிதாக இணைக்கப்படவுள்ளன. எனவே வழக்கு விசாரணைகள் தொடர உள்ள நிலையில் , சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்கு ஆட்சேபனை தெரிவிக்கிறேன்” என அரச சட்டவாதி மன்றில் விண்ணப்பம் செய்தார்.

இராஜாங்க அமைச்சர்,

எம்.பியிடம் விசாரணை

advertisement

இந்த வழக்குத் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் வாக்குமூலம் பெறுவதற்கு சபாநாயகரிடம் அனுமதி கோரியுள்ளனர்.சபாநாயகரின் அனுமதி கிடைத்ததும் அவர்கள் இருவரின் வாக்குமூலங்களும் பதிவு செய்யப்படும் எனவும் அரச சட்டவாதி மன்றில் தெரிவித்தார்.

சிறையிலுள்ள சிந்தக்கவிடம்

வாக்குமூலம் பெற அனுமதி

இந்த வழக்குடன் தொடர்புடைய கொடிகாமம் பொலிஸ் நிலைய முன்னாள் பொறுப்பதிகாரி சிந்தக்க பண்டாரவிடம் சிறைசாலையில் வைத்து வாக்குமூலம் பெற நீதிமன்ற அனுமதியை குற்றப் புலனாய்வு துறையினர் கேட்ட போது, நீதிவான் அதற்கு அனுமதி வழங்கினார்.

அந்தப் பொலிஸ் அதிகாரி சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய போது பொலிஸ் நிலையத்தில் சுமணன் எனும் இளைஞனை சித்திரவதை செய்த குற்றத்துக்காக அவருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் 10 வருட கடூழிய சிறைத் தண்டனை வித்துள்ளது.

நியாயாதிக்கம் உண்டா ?

“இந்த வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் ஊர்காவற்றுறை நீதிவான் மன்றுக்கு உண்டா? எனும் நியாயமான சந்தேகம் மன்றுக்கு எழுந்துள்ளது. இந்த மன்றின் நியாயதிக்கத்துக்குட்பட்ட பகுதியில் குற்றச்செயல் நடைபெற்றதா? அல்லது இந்த வழக்குடன் தொடர்புடைய குற்றசெயலின் பாகங்கள் ஏதேனும் இந்த மன்றின் நியாயதிக்கத்துக்குள் நடைபெற்றதா?என்பது தொடர்பில் விரிவான அறிக்கை ஒன்றை அடுத்த தவணையில் குற்றபுலனாய்வு துறையினர் மன்றில் சமர்ப்பிக்க வேண்டும்” என்று நீதிவான் உத்தரவிட்டார்.

யாழ். மாவட்ட

முன்னாள் டிஐஜி

வாக்குமூலமளிக்க விருப்பம்

புங்குடுதீவு மாணவி கொலை நடந்த காலப் பகுதியில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்தவரும் தற்போது சப்பிரகமுவா பிரதி பொலிஸ்மா அதிபராக கடமையாற்றும் பெரேரா தானாக முன் வந்து சுவிஸ்குமார் தப்பிச் செல்ல உதவியமை தொடர்பான வழக்கு விசாரணையில் சாட்சியம் வழங்கப் போவதாக மன்றில் அனுமதி கோரினார்.

அதற்கு சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். இந்தச் சாட்சியம் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வாக்குமூலத்தை மன்றில் வழங்க உள்ளார் என தெரிவித்து சந்தேகநபர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

அத்துடன் சாட்சியமளிக்க வந்துள்ளவர் பொலிஸ் சீருடையில் கடமை நேரத்தில் சப்பிரகமுவாவில் இருந்து நீதிமன்றுக்கு வந்துள்ளார் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதற்கு அரச சட்டவாதி ஆட்சேபனை தெரிவித்து, குறித்த சாட்சி தானாக முன்வந்து சாட்சியமளிக்க வந்துள்ளார். எனவே அவர் சாட்சியமளிக்க மன்று அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பம் செய்தார்.

வாக்குமூலம் வழங்க

உரிமை உண்டு

இந்த வழக்கை விசாரணை செய்யும் நியாயாதிக்கம் இந்த நீதிமன்றுக்கு உண்டு என நீதிமன்றம் முடிவு செய்த பின்னரே இந்த வழக்குத் தொடர்பில் வாக்குமூலங்களை நீதிமன்றம் பதிவு செய்யும். இதேவேளை குற்ற சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடகவோ , வாக்குமூலமாகவோ தெரிவிக்கும் உரிமை அனைவருக்கும் உண்டு.

அந்த உரிமையை நீதிமன்றம் தடுக்காது. அதேவேளை நீதிமன்றுக்கு வாக்குமூலம் வழங்க வருபவர் இவ்வாறான உடையில்தான் வர வேண்டும் எனும் சட்ட வரையறை இல்லை. எனவே இந்த வழக்குத் தொடர்பில் வாக்குமூலம் வழங்க விரும்புவரின் சாட்சியம் பதிவு செய்யப்படும். ஆனாலும் இந்த வழக்கை விசாரணை செய்வதற்கு நீதிமன்றுக்கு நியாயாதிக்கம் உண்டு எனும் முடிவை எட்டிய பின்னரே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படும்.

மருத்துவ சிகிச்சை

வழங்க உத்தரவு

சந்தேகநபருக்கு கழுத்து வலி அதிகமாக உள்ளதாக மன்றின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதனால் சந்தேகநபருக்கு உரிய சிகிச்சைகளை சிறைச்சாலை விதிமுறைகளுக்கு ஏற்ப வழங்க சிறைச்சாலை அத்தியட்சகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த தவணையின் போது சந்தேகநபருக்கு சிகிச்சை அளிக்கபப்ட்டு அது தொடர்பிலான அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்க உததரவிட்டிருந்தேன். அந்த அறிக்கை இன்றைய தினம் மன்றில் கையளிக்கப்படவில்லை. அது தொடர்பில் சிறைச்சாலை அத்தியட்சகர் அடுத்த தவணையின் போது மன்றுக்கு அறிக்கை சமர்பிக்க வேண்டும் என நீதவான் உத்தரவு இட்டார்.

22ஆம் திகதி வரை

விளக்கமறியல்

அதனைத் தொடர்ந்து சந்தேகநபரை எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் கட்டளையிட்டார். இந்த வழக்கு விசாரணை ஊர்காவற்றுறை நீதிவான் மன்றில் நேற்று சுமார் 2 மணிநேரம் நடைபெற்றது. சந்தேகநபரை பிணையில் விடுவிக்க வேண்டும் என சந்தேகநபர் சார்பில் முன்னிலையான மூன்று சட்டத்தரணிகளும் கடும் வாதங்களை முன்வைத்தனர்.

சிறிகஜன் முற்படுத்தப்படவில்லை

இந்த வழக்கில் மற்றுமொரு சந்தேகநபரான யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் முன்னர் உப பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய சுந்தரேசன் சிறிகஜன் நேற்று மன்றில் முற்படுத்தப்படவில்லை. அவருக்கு எதிராக நீதிமன்றால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதுடன் அவர் பொலிஸ் சேவையிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.

சந்தேகநபருக்கு

சிறப்பு ஒழுங்கு

இந்த வழக்கின் முதன்மைச் சந்தேகநபரான லலித் ஏ ஜெயசிங்க நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட வேளை அவருக்கு நீதிமன்றக் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளை ஏனைய விளக்கமறியல் கைதிகளுடன் நீதிமன்றச் சிறை கூடத்தில் தடுத்து வைக்கப்படாமல், நீதிமன்ற சிறை கூடத்துக்கு வெளியில் கதிரை ஒன்றில் அமர வைக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை அவரை நேற்று நீதிமன்றில் பார்வையிட வந்திருந்த மூன்று இளைஞர்கள் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் முன்னிலையில் சந்தேகநபரின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.

751 total views