யாழில் 40 இற்கு மேற்பட்டோர் கைது!

Report
10Shares

யாழ். குடாநாட்டில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் இன்றும் (திங்கட்கிழமை) தொடர்வதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கடந்த இரு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட இந்த தேடுதல் நடவடிக்கைகளால் துன்னாலை, கோண்டாவில் மற்றும் அவ்வாய்ப் பகுதிகளில் 40 இற்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சி, துன்னாலையில் நேற்றும் நேற்று முன்தினமும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களில் நேற்று 10 இளைஞர்களும், நேற்றுமுன்தினம் 3 இளைஞர்களும்கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் முறையான ஆவணங்கள் இல்லாத மோட்டார் சைக்கிள்களும், ஹன்ரர் ரக வாகனங்களும் கைப்பற்றப்பட்டு பருத்தித்துறைப் பொலிஸ் நிலையத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.

இதேவேளை, யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின்போது 12 இளைஞர்கள் திடீரெனக் கைது செய்யப்பட்டனர்.

அவர்களில் சிலரிடம் அடையாள அட்டை இல்லை என்ற காரணத்தால் வாகனமொன்றில் பயணித்த அனைவரும் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தத் திடீர் சுற்றிவளைப்புத் தேடுதல் நடவடிக்கைகளால் யாழ். குடாநாட்டில்பெரும் பதற்றம் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

441 total views