புலிக்குகையை காண வரும் சுற்றுலா பயணிகளிடம் கட்டணம் வசூலிக்க தொல்லியல் துறை முடிவு

Report
13Shares

சாளுவன் குப்பத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள புலிக்குகை சிற்பங்களை சுற்றுலா பயணிகள் இலவசமாக கண்டு ரசித்து வரும் நிலையில், அதற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தொல்லியல்துறை தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள பல்லவ மன்னர்களின் கற் சிற்பக் கலை சின்னங்கள் மற்றும் குடவரை கோயில்கள், பல்லவ மன்னர்களின் சிற்பக் கலையை உலகுக்கு பறைசாற்றி வருகிறது. இச்சிற்பங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம், புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது. மேலும், கைவினை கலை நகரமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், குடவரை சிற்பங்களின் அழகைக் கண்டு ரசிப்பதற்காக வெளி நாடுகளிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து செல்வதால், சர்வதேச சுற்றுலா தலமாக மாமல்லபுரம் விளங்கி வருகிறது.

குடவரை சிற்பங்கள் மற்றும் கற் சிற்பக் கலை சின்னங்களை தொல்லியல் துறை பாதுகாத்து, பராமரித்து வருகிறது. இதனால், கடற்கரை கோயில், ஐந்து ரதம் ஆகிய கலை சின்னங்களை அருகில் சென்று கண்டு ரசிக்க, சுற்றுலா பயணிகளிடம் தொல்லியல்துறை கட்டணம் வசூலிக்கிறது. இதன்படி, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளிடம் ஒருவருக்கு ரூ.500-ம், உள்ளூர் சுற்றுலா பயணிகளிடம் ஒருவருக்கு ரூ.30-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மாமல்லபுரத்தில் இருந்து 5 கி.மீ. தொலைவில் சாளுவன் குப்பம் பகுதியில் கடற்கரையை ஒட்டி தொல்லியல்துறை பராமரிப்பில் புலிக்குகை சிற்பம் மற்றும் சுனாமிக்கு பிறகு கண்டறியப்பட்ட முருகன் கோயில் ஆகியவை அமைந்துள்ளன. மேலும், பல்லவ மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட சிவன் கோயில் ஒன்றும் அதனருகே உள்ளது. இவற்றை சுற்றுலா பயணிகள் இலவசமாக பார்த்து ரசித்து வருகின்றனர். இந்நிலையில், புலிக்குகையை பார்க்க வரும் வெளிநாட்டினரிடம் ரூ.300, உள்ளூர் சுற்றுலா பயணிகளிடம் ரூ.15 கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் முறையான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனவும் தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.

729 total views