விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றன் ஆஜர்

Report
4Shares

ஜெயலலிதா மரணம் குறித்த ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் நேற்று காலை 10.35 மணி அளவில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அவரிடம் ஆணையம், ஜெயலலிதாவை எப்போது முதல் உங்களுக்கு தெரியும்? எவ்வளவு காலம் ஜெயலலிதாவிடம் பணியாற்றினீர்கள்? முதல்–அமைச்சராக இருந்தபோது ஜெயலலிதா எடுத்துக்கொண்ட மருந்துகள் விவரம் தெரியுமா? அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது நடந்த நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் மருத்துவமனையில் அவருடன் இருந்தீர்களா? அவருக்கு யார், யார் சிகிச்சை அளித்தார்கள்? என்ன வகை சிகிச்சை அளிக்கப்பட்டது? என்பன போன்ற கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டது.

தெரிந்த தகவல்களை மட்டும் அவர் தெரிவித்தார். தெரியாத கேள்விகளுக்கு தெரியவில்லை என்று கூறியதாக ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. தொடர்ந்து அவரிடம் பல கேள்விகள் கேட்கப்பட வேண்டியிருப்பதால் மீண்டும் 23–ந் தேதி ஆணையத்தில் ஆஜராக வேண்டும் என்று ஆணையம் அவருக்கு உத்தரவிட்டது.

பின்னர் வெளியே வந்த பூங்குன்றனிடம், ‘ஆணையம் சார்பில் உங்களிடம் என்ன கேள்விகள் கேட்கப்பட்டது? நீங்கள் ஏதாவது ஆவணங்கள் சமர்ப்பித்தீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பூங்குன்றன், ‘இன்று அஷ்டமியாக இருப்பதால் எதுவும் பேச முடியாது. ஜெயலலிதாவுக்காக இதைக்கூட செய்யமாட்டேனா என்ன? விசாரணை முடிந்த உடன் இதுகுறித்து பத்திரிகையாளர்களிடம் விளக்கமாக பேசுகிறேன்’ என்று கூறி சென்றார்.

மதுரையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் மதுரை பாலன் என்பவர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக செவி வழி தகவல்கள் எனக்கு அதிகம் தெரியும் என்பதால் என்னையும் அழைத்து விசாரிக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். அவருக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டதால் அவரும் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

ஜெயலலிதாவின் பாதுகாப்பு அதிகாரி பெருமாள்சாமி இன்று (புதன்கிழமை) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ஒரு முக்கிய பிரமுகருக்கு பாதுகாப்பு பணிக்காக செல்லவிருப்பதால் இன்று ஆஜராக இயலாது. எனவே வேறொரு தேதியை ஒதுக்கும்படி கோரி மனு அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆணையம் பொங்கல் பண்டிகைக்கு பிறகு ஒரு தேதி ஒதுக்கப்படும் என்று கூறியது.

விசாரணை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:–

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையத்தில் தனக்கு எதிராக சாட்சியம் அளித்தவர்களின் சாட்சியங்கள் நகல் மற்றும் விவரங்களை அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் மனு கொடுக்கப்பட்டு இருந்தது. அந்த நகல் ஆணையத்தில் தயார் நிலையில் உள்ளது. இன்று விசாரணை நடைபெறாததால் சசிகலா தரப்பு வக்கீல்களிடம் நகல் அளிக்கப்படும்.

கடந்த சில நாட்களாக விசாரணை ஆணையத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. நேற்றும் சுமார் 2 மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் கணினி செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் தடைபட்டது. புகார் செய்தபின்னர் அதிகாரிகள் சரிசெய்தனர். விசாரணை ஆணையத்துக்கு என்று தனியாக ஒரு மின் இணைப்பு வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

1085 total views