தீயில் கருகிய கோரக்பூர் குழந்தைகள் உயிரிழப்பு ஆவணங்கள்..!

Report
2Shares

கோரக்பூர் மருத்துவமனையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்தது சம்பந்தமான கோப்புகள் தீயில் எரிந்துவிட்டது, பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் அமைந்துள்ளது, பாபா ராகவ் தாஸ் (பி.ஆர்.டி) அரசு மருத்துவமனை. இந்த மருத்துவனையில், சென்ற செப்டம்பர் மாதம், ஆறே நாட்களில் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தன. இதில், 30 குழந்தைகள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தது பின்னர் தெரியவந்தது. மருத்துவமனைக்கு ஆக்ஸிஜன் விநியோகிக்கும் நிறுவனத்திற்கு நிலுவைத்தொகையை வழங்காததே அந்நிறுவனம் ஆக்ஸிஜன் வழங்குவதை நிறுத்தக் காரணம் என்று செய்திகள் வெளிவந்தன. அரசுத் துறைகளின் அலட்சியத்தால், இந்த உயிரிழப்புகள் நிகழ்ந்தன. இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில், பி.ஆர்.டி மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மருத்துவமனையில் கோப்புகளை வைக்கும் இடம், பேராசிரியர் ஒருவரின் அறை ஆகிய இடங்களில் தீப்பிடித்தது. சிறிது நேரத்தில் தீ அணைக்கப்பட்டது. ஆனால், அதற்குள் ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக குழந்தைகள் உயிரிழந்தது சம்பந்தமான கோப்புகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் கருகி நாசமடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. மருத்துவமனை ஊழியர் ஒருவர், இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இதை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

மின்தொடர்பில் ஏற்பட்ட பழுது காரணமாகத் தீ விபத்து நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. மருத்துவமனையில் தீவிபத்தைத் தடுப்பதற்கான அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அது செயல்படவில்லை. இது, பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பான ஆவணங்களை அழிப்பதற்காக இந்தத் தீவிபத்து ஏற்படுத்தப்பட்டிருக்கலாமோ என சமாஜ்வாடி கட்சியின் மாவட்டச் செயலாளர் பிரகலாத் யாதவ் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

1022 total views