ஓகி புயல் பாதிப்புக்கு கேரளாவில் பலியான மீனவர் குடும்பத்துக்கு தலா ரூ.20 லட்சம் நிதி

Report
4Shares

கேரளாவில் ஓகி புயலுக்கு பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் பினராய் விஜயன் அறிவித்துள்ளார். கேரளாவில் கடந்த 30ம் தேதி வீசிய ஓகி புயலால் கடும் சேதம் ஏற்பட்டது.

இதில் கடலில் மீன்பிடிக்க சென்ற 28 மீனவர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே பலியான மீனவர்கள் குடும்பத்திற்கு கேரள அரசு நிவாரண தொகையாக ரூ.10 லட்சம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் முதல்வர் பினராய் விஜயன் நிருபர்களிடம் கூறியதாவது: கேரளாவில் ஓகி புயலுக்கு 28 மீனவர்கள் பலியாகி உள்ளனர். இன்னும் 92 மீனவர்களை தேடும் பணி நடக்கிறது.

கடலில் பலியான மீனவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே ரூ.10 லட்சம் நிவாரண தொகை அறிவிக்கப்பட்டது. தற்போது கூடுதலாக மீனவர் நலநிதி வாரியம் சார்பில் ரூ.5 லட்சம், மீன்வளத்துறை சார்பில் ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.20 லட்சம் வழங்கப்படும்.

படுகாயமடைந்த மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத தொழிலாளர்களுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும். கடந்த ஒரு வாரமாக மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

எனவே இன்று முதல் 7 நாட்களுக்கு அவர்களது குடும்பத்தில் உள்ள முதியவர்களுக்கு தினமும் ரூ.60ம், குழந்தைகளுக்கு ரூ.45ம் வழங்கப்படும்.

ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக அனைத்து மீனவ குடும்பத்தினருக்கும் இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இனி ஒரு மாதத்திற்கு இது நீட்டிக்கப்படும்.

ஓகி புயல் குறித்து கேரள அரசிற்கு தகவல் கொடுப்பதில் மத்திய வானிலை ஆராய்ச்சி மையம் போதிய கவனம் செலுத்தவில்லை. கேரளாவிற்கு வந்த மத்திய அமைச்சர்களும் இதே கருத்தைத்தான் கூறினர். கடந்த ஒரு நூற்றாண்டில் கேரளா சந்தித்த எதிர்பாராத பேரிடராகும். இவ்வாறு அவர் கூறினார்.

மது அருந்த குறைந்தபட்ச வயது வரம்பு 23 ஆனது

கேரளாவில் மது அருந்துவதற்கான வயது வரம்பு 21 ஆக உள்ளது. இதை 23 ஆக உயர்த்த நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி கேரளாவில் 23 வயதுக்கு குறைவானவர்களுக்கு மது விற்றால் தண்டனை வழங்கப்படும். இது தொடர்பாக விரைவில் அவசர சட்டம் இயற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

687 total views