மக்களை துன்பத்தில் தள்ள எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை : சிதம்பரம்

Report
5Shares

பண மதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வரப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தது தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், ஜனநாயகத்தில் மக்களை தீராத துன்பத்தில் தள்ள எந்த ஒரு அரசுக்கும் அதிகாரம் என தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் சிதம்பரம் பதிவிட்டுள்ள கருத்து: பண மதிப்பிழப்பு கொண்டு வரப்பட்ட ஓராண்டுக்கு பிறகும் அந்த முடிவை நியாயப்படுத்துவதற்காக சொல்லப்படும் அனைத்தும் மறுக்கப்படுவதுடன், கேலிக்கு உள்ளாகிறது. நியாயப்படுத்துவதற்காக அவர்கள் கூறும் காரணம், கள்ள நோட்டுக்களை ஒழிப்பது. பண மதிப்பிழந்த ரூ.15,28,000 கோடி பணம் ஆர்பிஐ.,க்கு திரும்பி வந்துள்ளதாக கூறப்பட்டது. இதில் வெறும் ரூ.41 கோடி மட்டுமே கள்ள நோட்டுக்கள்.

அப்படியானால் கள்ள நோட்டுக்களை ஒழிப்பதற்கு பண மதிப்பிழப்பு தீர்வு இல்லை என்று தானே அர்த்தம். இதே போன்று 2016 நவம்பர் 8 அன்று பணமதிப்பிழப்பின் மூலம் லஞ்சத்தை ஒழிப்போம், கறுப்பு பணத்தை மீட்போம் என்ற இரண்டு விஷயங்களை பிரதமர் அறிவித்தார். பணமதிப்பிழப்பு கொண்டு வரப்பட்ட போதிலும் லஞ்சம் வளர்ந்துள்ளது. லஞ்சம் கொடுப்பவர்கள், லஞ்சம் பெறுபவர்களும் பிடிபடுவது வழக்கமாக நடந்து கொண்டு தான் உள்ளது.

அடுத்தாக கறுப்பு பணத்தை கருத்தில் கொண்டால், வரி செலுத்தாக வருமானம் தினமும் பல்வேறு வழிகளில் பயன்படுத்தப்பட்டு தான் வருகிறது. வரி செலுத்தப்படாத பணம் லஞ்சம் கொடுப்பதற்கும், தேர்தல் நிதிக்கும், நன்கொடைகளாகவும் என பல வழிகளில் செலவிடப்பட்டு வருகிறது.

பண மதிப்பிழப்பு என்பது முற்றிலும் சிந்தனையற்ற மோசமான முடிவு. இந்த மிகப் பெரிய தவறால் அதிக செலவு ஏற்பட்டு பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சி அடைந்துள்ளது. கோடிக்கணக்கான சாமானிய மக்களை துயரத்தில் தள்ளி உள்ளது. ஜனநாயகத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்த அரசுக்கும் மக்களுக்கு தாங்க முடியாத துயரத்தை தருவதற்கும், மக்கள் மீது துயரத்தை திணிப்பதற்கும் அதிகாரம் இல்லை. இவ்வாறு சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

421 total views