பிரதமருடனான சந்திப்பில் அரசியல் பேசவில்லை: ஓபிஎஸ் மறுப்பு

Report
1Shares

டெல்லியில் பிரதமரை சந்தித்தபோது தமிழக அரசின் திட்டங்கள் குறித்து மட்டுமே பேசினேன் அரசியல் பற்றி பேசவில்லை என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக அணிகள் இணைந்த பிறகு துணை முதல்வராக பொறுப்பேற்ற ஓபிஎஸ் முதன் முறையாக பிரதமர் மோடியை இன்று சந்தித்தார். ஏற்கனவே பிரதமரை சந்திக்க நேரம் கேட்டு கிடைக்காத நிலையில் இன்று காலை 11 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டதை அடுத்து பிரதமரை ஓபிஎஸ் சந்தித்தார்.

மின்துறை அமைச்சர் தங்கமணி, மைத்ரேயன், செம்மலை, கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் அவருடன் டெல்லி சென்றனர். இருப்பினும், தங்கமணி இல்லாமல் தனது ஆதரவாளர்களுடன் பிரதமரை ஓபிஎஸ் தனியாக சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஓபிஎஸ் கூறியதாவது:

பிரதமரை எதற்காக சந்தித்தீர்கள்?

துணை முதல்வரான பின்னர் பிரதமரை முதல்முறையாக சந்திக்கிறேன். வாழ்த்து தெரிவித்தார். பின்னர் தமிழகத்தின் மின் தேவைக்கான நிலக்கரியை ஒதுக்கித்தரும்படி கேட்டுக்கொண்டேன். தருவதாக உறுதி அளித்துள்ளார். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகத்தின் இலக்கு 10 லட்சம் வீடுகள். அதுபற்றி கோரிக்கை வைத்தோம். தற்போது 3 லட்சம் வீடுகள் கட்டும் பணிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் நிதி ஒதுக்கப்படும் என்று பிரதமர் கூறினார்.

மின் திட்டம் பற்றி பேசச்செல்லும் போது மின் துறை அமைச்சரை அழைத்துச்செல்லாமல் தனியே சென்றது ஏன்?

அப்படி ஒன்றும் இல்லை. மின் துறை அமைச்சர் மதியம் 2 மணிக்கு பிரதமரை சந்திக்க உள்ளார்.

தனிப்பட்ட முறையில் சந்தித்து உங்கள் குறைகளை சொன்னதாகக் கூறப்படுகிறதே?

எந்த குறையும் இல்லை. அரசு சம்பந்தமான விஷயங்களை பற்றி மட்டுமே பேசினோம்.

நீங்கள் எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்த போது பேசப்பட்ட விஷயங்கள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறுகிறார்களே?

எந்தவித நிபந்தனையும் இன்றித்தான் நாங்கள் இணைந்தோம்.

இணைந்த பின்னர் என்ன விளைவு உண்டாகியுள்ளது?

நாங்கள் என்ன நோக்கத்திற்காக ஒன்று பட்டோமோ அது நிறைவேறி உள்ளது. எம்ஜிஆருடன், ஜெயலலிதாவுடன் இணைந்து செயல்பட்டபோது என்ன மன நிலையில் இருந்தோமோ அதே மன நிலையில் தான் உள்ளோம்.

பிரதமரை சந்தித்து உங்கள் பிரச்சினைகளைத்தான் சொன்னீர்கள் என்கிறார்களே?

இல்லவே இல்லை அவரிடம் டெங்கு பிரச்சினை தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக சொன்னேன். மத்திய அரசின் மருத்துவக்குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறினார்.

உள்ளாட்சி தேர்தல் நடக்காதது தான் டெங்கு பிரச்சினைக்கு காரணம் என்று ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளாரே?

உள்ளாட்சி தேர்தலுக்கும் டெங்கு பரவுவதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது?!

கட்சி அணிகள் இணைந்த பிறகும் கட்சியில், ஆட்சியில் உள்ள உங்கள் ஆதரவாளர்கள் ஓரங்கட்டப்படுவதாக கூறப்படுகிறதே?

சிறிதும் இல்லை.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன்னிச்சையாக செயல்படுவதாக கூறுகிறார்களே?

அப்படி ஒன்றும் இல்லை, என்னிடமும், அனைத்து அமைச்சர்களையும் கலந்து பேசித்தான் எந்த முடிவையும் முதல்வர் எடுக்கிறார்.

இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்தார்.

983 total views