இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு மே 10-ஆம் தேதி?... இன்று அல்லது நாளை அறிவிப்பு

Report
1Shares

தமிழக மாணவர்களின் எம்பிபிஎஸ் கனவுகளில் மண்ணை அள்ளிப்போடும் நீட் தேர்வு வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடத்தப்படலாம் என்று தகவல்கள் கூறுகின்றன.

தேசிய தகுதி காண் தேர்வு எனப்படும் நீட் தேர்வானது நாடு முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ சேர்க்கைக்கு வித்திடுவதாக கூறி மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இந்த தேர்வுக்கு பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளால் மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக இந்த தேர்வுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி தமிழக அரசு மத்திய அரசிடம் கோரியது. எனினும் அதை மத்திய அரசு செவிமடுத்து கூட கேட்கவில்லை.

கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றும் உச்சநீதிமன்றம் வரை சென்று போராடியும் நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்காததால் அரியலூர் மாணவி அனிதா மரணமடைந்தார். இது தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதையடுத்து நீட் பயிற்சி மையங்கள் என்று கூறி தெருவுக்கு தெரு பயிற்சி மையங்கள் முளைத்து காசு பார்க்கத் தொடங்கின.

இந்த ஆண்டு நீட் தேர்வு வரும் மே மாதம் 10-ஆம் தேதி நடைபெறும் என்று தெரிகிறது. தமிழக அரசு சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. எனவே நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக அரசு நடத்தி வரும் பயிற்சி மையங்கள் போதுமானதா என்பது நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகுதான் தெரியும்.

நீட் தேர்வானது இந்தி, ஆங்கிலம், உருது, குஜராத்தி, மராத்தி, பெங்காலி, ஒரியா, அஸ்ஸாமீஸ், தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடா ஆகிய மொழிகளில் கேள்விகள் கேட்கப்படுகிறது.

அந்தந்த மொழிகளில் மாணவர்கள் தேர்வு எழுதலாம். நீட் தேர்வை எழுத ஒரு மாணவருக்கு இரு முறை எழுதலாம். எனவே கடந்த ஆண்டு தோல்வி அடைந்தவர்களும் இந்த ஆண்டு தேர்வு எழுதுவர். இந்த தேர்வு எப்போது என்பது குறித்து சிபிஎஸ்இ இன்று அல்லது நாளை அறிவிக்க வாய்ப்புகள் உள்ளன.

110 total views