கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் சாதனையை முறியடித்த இளம் வீரர்

Report
5Shares

கிரிக்கெட்டில் பல ஜாம்பவான்கள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் பிதாமகன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய பேட்டிங் சராசரியை எட்டுவது சிம்ம சொப்பனமாகும்.

முதல்தர கிரிக்கெட் போட்டியில் டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்துள்ளார், ஆப்கானிஸ்தான் அணியின், 18 வயது வீரர் பஷீர் ஷா. முதல் தர கிரிக்கெட்டில், 1,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளவர்களில் 121.77 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளார்.

ஏழு முதல் தர கிரிக்கெட் போட்டியில், 12 இன்னிங்சில், 1,096 ரன்களுடன், 121.77 சதவீத சராசரியைப் பெற்றுள்ளார், 18 வயதாகும் பஷீர் ஷா. முதல் தர கிரிக்கெட்டில் பிராட்மேனின் சராசரி 95.14 சதவீதம். டெஸ்டில் அவருடைய சராசரி 99.94 சதவீதம்.

முதல் தர கிரிக்கெட்டில் இந்தியாவின் விஜய் மெர்ச்சன்ட், 71.64 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது நியூசிலாந்தில் நடக்கும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் ஆப்கானிஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள பஷீர் ஷா, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் முதல் தர கிரிக்கெட் அணிக்காக விளையாடத் துவங்கினார்.

12 இன்னிங்ஸ்களில், ஐந்து சதம், இரண்டு அரை சதம் அடித்துள்ளார். அவருடைய அதிகபட்சம், ஆட்டமிழக்காமல், 303 ரன்களாகும். தன்னுடைய முதல் போட்டியிலேயே, ஆட்டமிழக்காமல், 256 ரன்கள் எடுத்து அசத்தினார்.

போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான், கிரிக்கெட்டில் தற்போது முன்னேறி வருகிறது. ஐசிசியால் டெஸ்ட் விளையாடும் அணிக்கான அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது. தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவுடன் விளையாட உள்ளது ஆப்கானிஸ்தான். அதற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அப்போது பஷீர் ஷாவை நாம் நேரில் சந்திக்கலாம்.

334 total views