திருக்கோணமலை மாவட்ட உள்ளூராட்சி பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்” கி. மா. சபையின் எதிர்க்கட்சித்தலைவர்

January 13, 2013 Comments Off
திருக்கோணமலை மாவட்ட உள்ளூராட்சி பிரதிநிதித்துவம் காப்பாற்றப்பட வேண்டும்” கி. மா. சபையின் எதிர்க்கட்சித்தலைவர்

தற்போது அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவிருக்கும் உள்ளூராட்சித் தேர்தல் முறைமைச்சீர்திருத்தத்தின் கீழ் தமிழ் மக்கள் தாம் பாரம்பரியமாக வாழுகின்ற பிரதேசங்களில் தங்களின் இருப்புக்களை தக்கவைத்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினருமான சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

திருகோணமலை நகரசபையின் தலைவர் திரு. க.செல்வராசா [சுப்றா] தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திருகோணமலை நகர மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தண்டாயுதபாணி இக்கருத்தை வெளியிட்டார்.

2012ம் ஆண்டு 22ம் இலக்க உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தச்சட்டத்தின் கீழ் எல்லை மீள்நிர்ணயம் நடைபெறவிருக்கின்றது. இது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடமிருந்து ஆலோசனைகளை அரசாங்கம் கோரியுள்ளது. இம்மாதம் 30 ம் திகதிக்கு முன்னதாக ஆலோசனைகள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் எல்லைகள் தேசிய மற்றும் மாவட்ட நிலையில் மேற்கொள்ளப்படவிருக்கும் எல்லை மீள்நிர்ணயம் குறித்தும் திருகோணமலை நகரசபைக்குரிய எல்லை மீள்நிர்ணயம் குறித்தும் இவ்வாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தண்டாயுதபாணி தொடர்ந்து தெரிவித்ததாவது:-

“உள்ளூராட்சி தேர்தல் சீர்திருத்தம் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும். திருமலை மாவட்டத்தில் உள்ளூராட்சி சபைகளில் இருக்கும் தமிழ் மக்களின் பிரதிநித்துவத்தை தக்க வைத்துக் கொண்டு மேலும் அதிகரிப்பதற்கு விழிப்பாக செயற்படவேண்டும்.

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகளில் திருகோணமலை நகரசபை, திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை மற்றும் வெருகல் பிரதேச சபை ஆகியன மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

ஏனைய 10 உள்ளூராட்சி சபைகளான தம்பலகமம், கிண்ணியா நகரசபை, கிண்ணியா பிரதேச சபை, சேருவல பிரதேச சபை, கந்தளாய் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, மொறவேவா பிரதேச சபை , கோமரங்கடவல பிரதேச சபை, பதவிசிறிபுர பிரதேச சபை ஆகியன அரசாங்கக் கட்சியின் நிர்வாகத்தின் கீழ் உள்ளன. இவற்றில் அங்கு வசிக்கின்ற தமிழ் மக்களின் குடிப்பரம்பலுக்கு ஏற்ப தமிழ் உறுப்பனர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது கொண்டு வரப்படவிருக்கும் புதிய உள்ளூராட்சி தேர்தல் முறைமையின் கீழ் தமிழ் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும். தவறுவோமானால் தற்போது தமிழர்களின் நிர்வாகத்தில் இருக்கும் உள்ளூராட்சி சபைகளின் நிரவாகத்தையும் தமிழ் மக்கள் இழக்கும் நிலை ஏற்படலாம்” என்றும் தண்டாயுதபாணி தெரிவித்தார்

திருகோணமலை மாவட்டத்தின் முன்னைநாள் நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்னசிங்கம் மற்றும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உறுப்பினர்கள் பலரும் ஆலோசனைக்கூட்டத்தில் பங்குபற்றினர்.