சிறிலங்காவில் அண்மைக் காலத்தில் ஏற்பட்டுள்ள கடுமையான வானிலை மாற்றம் காரணமாக நாட்டின் மிக வறுமைக்குட்பட்ட, பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு பிரதேசங்கள் மேலும் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளதாக வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த டிசம்பர் 16 தொடக்கம் சிறிலங்காவின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பாரிய மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
சிறிலங்காவில் அண்மையில் பெய்த மழை காரணமாக 447,000 மக்கள் பாதிக்கப்பட்டதாகவும் இவர்களுள் 50,000 பேர் வரை இடம்பெயர்ந்ததாகவும் சிறிலங்கா அரசாங்கத்தின் அழிவு முகாமைத்துவ மையத்தின் புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு ஜனவரி மாதம் இரண்டாவது வாரத்தில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் நாட்டில் 45 மக்களின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதாகவும் எட்டுப் பேர் காணாமற் போயுள்ளதாகவும் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் அண்மையில் பெய்து வரும் மழைகாரணமாகப் பாதிக்கப்பட்ட அதே மாகாணங்கள் நவம்பர் மாத முற்பகுதியில் வீசிய நிசா வெள்ளப் பாதிப்பையும் சந்தித்தன. இதில் 200,000 வரையான மக்கள் பாதிப்பைச் சந்தித்ததுடன், ஏழு பேர் கொல்லப்பட்டனர். இந்த வெள்ளத்தின் போது 300 வீடுகள் அழிவடைந்தன.
இவ்விரு வெள்ளப்பெருக்குகளும் ஏற்படுவதற்கு முன்னர் பத்து மாதங்களாக சிறிலங்காவின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் நிலவிய பெரும் வறட்சி காரணமாக மக்களின் வாழ்வாதாரமும் விவசாயமும் பாதிப்படைந்தன.
“வடக்கு, கிழக்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஏற்கனவே பாதிப்பைச் சந்தித்துள்ளனர். வறட்சி மற்றும் வெள்ளப்பெருக்கு என்பதற்கு முன்னரே இந்த மக்கள் தமது அன்றாடங்களைக் கழிப்பதில் பெரும் கடினங்களை எதிர்நோக்குகின்றனர். தற்போது இவ்வாறான வெள்ளப்பெருக்குகள் மற்றும் வறட்சி போன்ற இயற்கை அழிவுகளால் மக்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளனர்” என சிறிலங்காவுக்கான அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் வதிவிடப் பிரதிநிதியான பொப் மக்கெறோ சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவின் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மில்லியன் வரையான மக்களில், யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த 471,000 வரையான மக்கள் தற்போது மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிவந்துள்ளனர். இவர்களுக்கான தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வருவாய்க்கான வழிகள் என்பன வடக்கு மாகாணத்தில் தொடர்ந்தும் பற்றாக்குறையாகவே காணப்படுகின்றன.
2010ல் மேற்கொள்ளப்பட்ட தேசிய போசாக்கு மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது தற்போது வடக்கு மாகாணத்தின் போசாக்கு மட்டம் அதிகரித்திருந்தாலும் கூட தேசிய மட்டத்தின் கீழேயே இதன் வளர்ச்சி காணப்படுவதாக, இது தொடர்பில் ஐ.நா சிறுவர் நிதியம், உலக உணவு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் சுகாதார அமைச்சு ஆகியவற்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது வடக்கு மாகாணத்திலுள்ள பிள்ளைகளில் வயதிற்கேற்ற உயரத்தைக் கொண்டிராத சிறார்களின் சதவீதம் 2010ல் 22.8 ஆகவும் 2012 யூனில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 19.2 சதவீதமாகவும் காணப்படுகிறது. இதேபோன்று உயரத்திற்கேற்ற வளர்ச்சியற்ற சிறார்களின் சதவீதமானது 2010ல் 18.3 ஆகவும் 2012ல் 11.7 சதவீதமாகவும் காணப்படுகிறது. எடைகுறைந்த சிறார்களின் சதவீதமானது 2010ல் 29.5 சதவீதமாகவும் 2012ல் 21.6ஆகவும் காணப்படுகிறது.
இந்நிலையில் தனது வயதிற்கேற்ற உயரத்தைக் கொண்டிராத நிலையானது நீண்ட கால போசாக்கு குறைபாட்டுக்கான அறிகுறியாகும். தமது உயரத்திற்கேற்ப நிறையைக் கொண்டிராத சிறார்கள் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்படாவிட்டால் உயிராபத்தை சந்திக்கின்ற அபாயம் காணப்படுகிறது. இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் வாழும் 15 சதவீதத்திற்கும் அதிகமான ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறார்கள், மிகத் துரிதமாக சிறப்பு போசாக்கு திட்டத்தின் கீழ் பராமரிக்கப்பட வேண்டும் என ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்மையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்ட பாரிய இரு வெள்ளப்பெருக்கால் யுத்தத்தின் போது இடம்பெயர்ந்து மீண்டும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பிய பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் மீளவும் இடம்பெயரவேண்டி ஏற்பட்டதாகவும் இவர்கள் முன்னர் ஏற்பட்ட வறட்சியாலும் பாதிப்படைந்ததாக மக்கெறோ மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடமேற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களின் வளர்ச்சி வீதமானது சராசரி வறுமைக்கோட்டு மட்டத்திற்கும் அதிகமாக காணப்படுவதாக குடும்ப வருமான, செலவீன ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ரீதியில் வறுமைக் கோட்டின் கீழே 7 சதவீதமான குடும்பங்கள் உள்ள அதேவேளையில், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் இந்த சதவீதம் 12 ஆகக் காணப்படுகிறது. சிறிலங்காவின் முக்கிய பயிர்ச்செய்கையாக காணப்படும் நெற்பயிர்ச் செய்கையில் ஏற்பட்ட பாதிப்பே போசாக்கு குறைவுக்கு மிக முக்கிய காரணியாக காணப்படுவதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தேசிய நெல் உற்பத்தியில் 15-20 சதவீதம் பங்களிக்கின்ற வடமத்திய மாகாணத்தின் பொலநறுவை மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதத்திலிருந்து மூன்று தடவைகள் வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி 09 வரை 34,000 கெக்ரேயர் நெல்வயல்கள் நீரில் மூழ்கியிருப்பதாகவும் இந்த மாவட்டத்தின் வேளாண்சேவை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வடக்கின் நெற்களஞ்சியம் எனக் கூறப்படும் மன்னார் மாவட்டத்தில் 2011ல் செய்கை பண்ணப்பட்ட நெல்வயல்கள் தற்போது ஏற்பட்ட வெள்ள அழிவால் 30 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாகவும், இதேவேளை நெற்பயிர்ச் செய்கையானது மாவட்டத்தில் ஏற்பட்ட அதீத வறட்சி காரணமாக மேலும் 30 சதவீதத்தால் பாதிப்பைச் சந்தித்ததாகவும் மன்னார் மாவட்ட விவசாய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏற்கனவே வறட்சியால் பாதிப்படைந்த நெற்பயிர்ச் செய்கையானது தற்போது வெள்ள அழிவால் பாதிப்படைந்துள்ளதால் இது தொடர்பில் மீளவும் மதிப்பீடொன்றை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக சிறிலங்கா விவசாய அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.








