ரிசானா நபீக்கிற்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதானது கொடூரமானதும் மனிதத்தன்மை அற்றதுமான நடவடிக்கை என பிரித்தானியா கண்டனம் தெரிவித்துள்ளது.
ரிசானாவிற்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை நிறுத்தக்கோரி தாய்நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பல விண்ணப்பங்களை சவூதி அதிகாரிகள் மறுத்துவிட்டு, ரிசானா நபீக்கிற்கு தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
கடந்த 2005ல் தனது கவனிப்பிலிருந்த குழந்தை ஒன்றை மூச்சு திணறச் செய்து கொன்றார் என்ற குற்றச்சாட்டில் 24 வயதான ரிசானா நபீக்கிற்கு நேற்று முன்தினம் சவூதியில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
குழந்தையின் தாயுடனான வாய்த்தர்க்கத்தின் பின் இவர், நான்கு மாத ஆண் குழந்தயை மூச்சடைக்க செய்து கொன்றார் என சவூதி அதிகாரிகள் கூறியிருந்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை ரிசானா மறுத்துள்ளார்.
குழந்தை இறந்தபோது ரிசானா 17 வயதுடையவராக காணப்பட்டுள்ளார். எனவே, சிறுபராயத்தினரின் உரிமைகள் பற்றிய சர்வதேச விதிகளுக்கு முரணானது என இந்த மரண தண்டனையை மனித உரிமைகள் கண்காணிப்பு எனும் அமைப்பு கண்டித்துள்ளது
சவூதி உள்விவகார அமைச்சு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை உறுதி செய்தது. ஆனால், அது பற்றிய விபரங்களை வெளிப்படுத்தவில்லை.
இவரது மரண தண்டனையை குறைக்குமாறு பல விண்ணப்பங்கள் செய்யப்பட்ட போதும் நேற்று முன்நாள் ரிசானா நபீக்கின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை நான் கண்டிக்கின்றேன்’ என மத்திய கிழக்குக்கான வெளிநாட்டு அமைச்சர் அலிஸ்ரெயர் பேட் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
தலை வெட்டப்படுவது கொடூரமானதும் மனித தன்மை அற்றதுமான நடவடிக்கையென நாம் கருதுகிறோம். அடிக்கடி மரண தண்டனை நிறைவேற்றப்படுவது உட்பட மனித உரிமைகள் பற்றி எமது விசனத்தை சவூதி அதிகாரிகளுக்கு தெரிவித்து வருகின்றோம் என அவர் மேலும் கூறினார்.








