புத்தருக்கு முத்தம் கொடுத்த பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறிலங்காவில் ஆறுமாத கடூழியச்சிறை – (படங்கள் இணைப்பு)

August 22, 2012 0
புத்தருக்கு முத்தம் கொடுத்த பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகளுக்கு சிறிலங்காவில் ஆறுமாத கடூழியச்சிறை – (படங்கள் இணைப்பு)

புத்தர் சிலைக்கு முத்தம் கொடுத்த பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் மூவருக்கு சிறிலங்காவில் ஆறுமாத ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலையை இழிவுபடுத்தும் வகையில், ஒளிப்படங்களை எடுத்து பௌத்தர்களின் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டது.

இந்த சுற்றுலாப் பயணிகள் தாம் எடுத்த ஒளிப்படங்களை அச்சிடக் கொடுக்கச் சென்ற போது, அதைப் பார்த்த வணிக நிலைய உரிமையாளர் சிறிலங்கா காவல்துறைக்கு தகவல் கொடுத்திருந்தார்.

இதையடுத்து பிரான்சில் இருந்து சிறிலங்காவுக்கு சுற்றுலா வந்திருந்த பெண்கள் இருவரும் ஆண் ஒருவரும் காலியில் வைத்து நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டு நேற்று காலி நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

கண்டியில் உள்ள பௌத்த விகாரை ஒன்றில் புத்தர் சிலைகளோடு இவர்கள் எடுத்த படங்களில் ஒன்றில் கைது செய்யப்பட்ட பிரெஞ்சுப் பெண்களில் ஒருவர் புத்தர் சிலைக்கு முத்தம் கொடுக்கும் படமும் இருந்தது.

இவர்களுக்கு ஆறுமாத கடூழியச் சிறைத்தண்டனையை நீதிமன்றம் விதித்தது, ஆனாலும் நீதிவான் அந்தத் தண்டனையை ஐந்து ஆண்டுகளுக்கு ஒத்திவைத்துள்ளார்.

புனிதப்பொருட்கள் பாதுகாப்பு சட்டத்தின் எந்தமதப் பிரிவினரின் மத உணர்வையும் புண்படுத்தவோ இழிவுபடுத்தவோ கூடாது என்ற பிரிவின் அடிப்படையில் குற்றவியல் சட்டத்தின் கீழ் இவர்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் சி்றிலங்கா வந்திருந்த அரபிகள் ஐந்து பேர் பௌத்தமதத்தை இழிவுபடுத்தும் வகையில் பிரசுரங்களை விநியோகித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது