கிழக்கு மாகாண தேர்தல் அரசாங்கத்தை கட்டுப்படுத்த கடவுள் கொடுத்த சந்தர்ப்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தை கட்டுப்படுதத கடவுள் கொடுத்துள்ள சிறந்த சந்தர்ப்பமாகவே நாங்கள் கிழக்கு மாகாண தேர்தலை காண்கின்றோம்.
நீதியும், நியாயமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது கடவுளின் விருப்பம். இந்த சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் வென்று அந்த விருப்பத்தை அழிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. இதற்கு சந்தர்ப்பம் வழங்கக் கூடாது.
சர்வதேசத்தினால் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடும் தேவை அரசாங்கத்திற்கு உள்ளது.
இதனால் எப்படியும் கிழக்கு மாகாண தேர்தலில் வெற்றிப்பெற்றாக வேண்டும் என்ற முனைப்புடன் அரசாங்கம் செயற்பட்டு வருகிறது. இதற்கு நாம் இடமளிப்பதா, அல்லது சர்வதேச சமூகத்திற்குள் தமிழர்கள் தொடர்பாக இருக்கும் நிலைப்பாடுகளை இந்த தேர்தலில் காண்பிக்கும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.








