நாடளாவிய ரீதியில் வைத்தியர் பணிப் பகிஷ்கரிப்பு

August 17, 2012 0
நாடளாவிய ரீதியில் வைத்தியர் பணிப் பகிஷ்கரிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வைத்தியர்கள் இன்று (17) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை மருத்துவ சபையின் வைத்திய அதிகாரி ஒருவரின் வீட்டின் மீது கைக்குண்டு வீசப்பட்ட சம்பவத்தைக் கண்டிக்கும் வகையில் இந்த பணி பகிஷ்கரிப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் நவீன் சொய்சா கூறினார்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் ஆரம்பித்த பணிப் பகிஷ்கரிப்பு தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் ஆரம்பித்துள்ள அடையாள பணி பகிஷ்கரிப்பினால் நேற்று வெளிநோயாளர் பிரிவிற்கு சிகிச்சைக்காக சென்ற நோயாளர்கள் அளெகரியங்களை எதிர்நோக்கினர்.

தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு, தீவிர கண்காணிப்பு பிரிவு என்பன இயங்கியதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அணில் ஜயசிங்க தெரிவித்தார்.

இன்றைய தினம் வைத்தியசாலை அதிகாரிகளின் பணி பகிஷ்கரிப்பு தொடர்ந்தால் சிகிச்சை நடவடிக்கைகள் பாதிக்கப்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.