கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பரப்புரையில் கூட்டணி அமைத்து செயற்படுவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் ஆரம்ப கட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வேட்பாளர் படடியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் கடந்த வெள்ளியன்று இந்தப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் சார்பில் அதன் பொதுச்செயலர் ஹசன் அலியும் இந்தப் பேச்சுக்களில் பங்கேற்றனர்.
கிழக்கு மாகாணசபையின் அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு நிரந்தரமான கூட்டணியை அமைப்பது குறித்து இருகட்சிகளும் கலந்துரையாடியதாக அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
அத்துடன் இருசமூகங்களுக்கும் பொதுவான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான பொதுவான நடவடிக்கை குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்கள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்ததாக, ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.












