ரிசாத் பதியூதீனின் அட்டகாசம் – இரத்தக் கண்ணீர் வடிக்கும் சிறிலங்காவின் நீதித்துறை

July 19, 2012 2
ரிசாத் பதியூதீனின் அட்டகாசம் – இரத்தக் கண்ணீர் வடிக்கும் சிறிலங்காவின் நீதித்துறை

ராஜபக்ஷ அரசாங்கத்தினர், தமது அநீதிக்கு கீழ்ப்படியாது சட்டத்தை மதிக்கும் நீதிபதியை அச்சுறுத்தி, கல்வீச்சு தாக்குதல் நடத்தி, அவதூறு ஏற்படுத்தும் வகையில் நாட்டின் சட்டம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதை மன்னாரில் நேற்று நடைபெற்ற சம்பவம் உணர்த்தியுள்ளது. இந்த செய்திகளை வெளியிட வேண்டாம் என ராஜபக்ஷவினர் பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

கடந்த 16 ஆம் திகதி அமைச்சர் ரிசாத் பதியூதீன் தனது சகாக்களை அனுப்பி, மன்னார் துறைமுக மீனவர்களை மீது தாக்குதல் நடத்தியிருந்தார். இது தொடர்பாக மன்னார் காவற்துறையினர் நீதிமன்றத்தில் தகவல்களை வழங்கிய போது, தகுதி தராதரம் பாராது, சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைதுசெய்து, நீதிமன்றத்தில் நிறுத்துமாறு மன்னார் நீதவான் டி.ஜே.ஜூட்சன் காவற்துறையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் பின்னர், நேற்று முன்தினம் அமைச்சர் ரிசாத் பதியூதீன், மன்னார் நீதவானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, குறித்த சம்பவத்துடன் சம்பந்தப்பட்டவர்கள் தனது ஆட்கள் எனவும் அவர்களுக்கு எதிராக எதனையும் செய்ய வேண்டாம் எனவும் கூறி, நீதவானுக்கு அழுத்தம் கொடுத்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள நீதவான், நீதிமன்றத்தில் உள்ள வழக்கொன்று தொடர்பில் அமைச்சர் என்ற வகையில் தன்னை தொடர்பு கொள்வது கூட சட்டவிரோதமானது எனவும் நீதியை நிலைநாட்டுவது குறித்து தனக்கு கற்பிக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் பதியூதீன், அப்படியானால் பார்த்து கொள்வோம். நான் முழு மன்னாரையும் தீவைத்து எரிப்போன் எனக் கூறி, நீதவானை அச்சுறுத்தியுள்ளார்.

இதன் பின்னர், நேற்று மதியம் மன்னார் நீதவானுக்கு அவதூறு ஏற்படுத்தும் கையில் கோஷங்களை எழுப்பியவாறு, நீதிமன்ற உத்தரவுக்கு விரோதமாக பதியூதீனின் ஆட்கள், மன்னார் நீதிமன்றத்திற்கு எதிரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மன்னர் நீதவான் நீதிமன்றத்தையும் மேல் நீதிமன்றத்தையும் கல்வீசி தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர், காவற்துறையினருடனும் பதியூதீனின் ஆட்கள் மோதியுள்ளனர். இதனையடுத்து அவர்களை கலைப்பதற்காக காவற்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியுள்ளனர். அத்துடன் 8 பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர். சம்பவத்தில் மூன்று காவற்துறையினர் காயமடைந்தனர்.

அமைச்சர் ஒருவர் நீதிபதி ஒருவரை அச்சுறுத்திய பின்னர், தமது குண்டர்களை கொண்டு நீதிமன்றம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் இலங்கை நீதிமன்ற வரலாற்றில் என்றுமே நடந்ததில்லை. இது மிகவும் கடுமையான சம்பவம் என்பதால், இது குறித்து கலந்துரையாடுவதற்காக இலங்கை நீதவான்களின் கூட்டம் ஒன்று நாளைய தினம் நடைபெறவுள்ளது.

தேர்தல் நடைபெறவுள்ளதால், இந்த சம்பவம் அரசாங்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த சம்பவம் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம் என ராஜபக்ஷ அரசாங்கத்தினர் ஊடக நிறுவனங்களில் தலைவர்களை தொடர்பு கொண்டு அழுத்தங்களை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.