போர் முடிவுற்ற மூன்று ஆண்டுகளுக்கு பிறகும் அப்பாவி தமிழர்கள் அடிமை படுத்தப்பட்டு; ஊடகங்கள் கீழ்படுத்தப்பட்டு; போர் நடக்க ஆட்சி எதிர்ப்பு புரட்சியில் ஈடுபட்ட சிறுபான்மை தமிழர்களை இரண்டாம் நிலை குடிமக்கள்களாக நடத்தும் இலங்கை அரசு, சர்வதிகார ஆட்சிமுறையை நோக்கிச் செல்கிறதென்று நாட்டின் மனித உரிமை அமைப்புகளும் எதிர் கட்சிகளும் சாடியிருப்பதாக ‘வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிக்கை தனது பதிப்பில் வெளியிட்டுள்ளது.
இவ்வாறு குறிப்பிட்ட அப்பத்திரிக்கை, இலங்கை அரசின் எதிர்ப்பாளிகள் காணாமல் போயிருக்கும் நிலை ஆட்சியில் நடக்கும் சூழ்ச்சியின் தெளிவான வெளிப்பாடாகத்தான் அமைகிறதென்றும் இவ்வாண்டில் மட்டுமே நாட்டின் தென் பகுதிகளில் 52 நபர்கள் காணாமல் போயிருப்பதனையும் சுட்டிக்காட்டியுள்ளது.
2010-ஆம் ஆண்டின் தேர்தலில் ராஜபக்சேவின் அபார வெற்றியினால் அரசியலமைப்புகளில் உண்டான மாற்றம் காவல்துறை, நீதித்துறை, பொதுத்துறைகளின் மீது தனது அதிகாரத்துவத்தை நீட்டித்து நிலைநாட்டுவதற்கு மட்டுமல்லாது அதிபர் பதவியின் இரு தவணை வரையறை அமைப்புமுறையை முடிவுக்கு கொண்டுவருதலுக்கான உள்நோக்கமும் அடங்கியுள்ளது. இதன் அடிப்படையில்தான், எதிரனியில் போட்டியிட்ட சரத் பொன்சேகாவை கைது செய்து ஈராண்டுகாலம் சிறைபடவும் செய்துள்ளார்.
மேலும் குறிப்பிடுகையில், அதிபரின் சகோதரர் கோத்தபயா, பாதுகாப்பு மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சின் ஊடாக பொருளாதார திட்டவட்டங்களின் வழிநடத்துனராகவும் மற்றுமொரு சகோதரர் பசில், பொருளாதார அமைச்சின் தலைமை அமைச்சராகவும் மேலும் ஒருவர் பாராளுமன்ற சபாநாயகராகவும் ஆட்சியையே குடும்பத்தொழிலாக ராஜபக்சே மாற்றியமைத்துவிட்டார் என்றுள்ளது. அதிபர் ராஜபக்சேவின் பிற நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் தூதுவராகவும் முதலமைச்சராகவும் விமான நிறுவன நடத்துனராகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர் எனவும் ‘வாஷிங்டன் போஸ்ட்’ சாடியுள்ளது.
பெரும் சவால்களை எதிர்கொண்டபோதும், ஐக்கிய அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையோடு தொடர்ந்து ஈடுபாடு கொண்டிருக்க தீர்மானித்திருப்பதாக அரசியல் நிபுணர்களும் அரசாங்க அதிகாரிகளும் கூறியுள்ளதாக அப்பத்திரிக்கை தனதறிக்கையில் அம்பலப்படுத்தியுள்ளது.
வெற்றிக்குமரன் தமிழரசி








