நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் பகிரங்கமாக நடமாடிய நபர்! – (படம் இணைப்பு)

July 19, 2012 0
நெல்லியடி ஆர்ப்பாட்டத்தில் புலிக்கொடியுடன் பகிரங்கமாக நடமாடிய நபர்! – (படம் இணைப்பு)

தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும், காணி அபகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றில் மர்ம நபர்கள் சிலர் புலிக்கொடியுடன் நடமாடிய சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் நெல்லியடி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று முற்பகல் 11 மணியளவில் ஆரம்பமாகியது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது யாரோ இனம்தெரியாத நபர்கள் தங்களை அடையாளம் காணமுடியாதவாறு தலைக்கவசம் அணிந்த வண்ணம் இரு மோட்டார் சைக்கில்களில் ஆர்ப்பாட்டம் இடம்பெறும் பகுதியை சுற்றி வந்த பின்னர் வயோதிபர் ஒருவரை மோதிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் புலிக்கொடி ஏந்திய நபர்களைக் கண்டுகொள்ளவில்லை. அவர்களை தடுத்து நிறுத்தவோ, விசாரணைச் செய்யவோ பாதுகாப்புத் தரப்பினர் முயலவில்லையென அங்கிருந்த ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் பொதுமக்களை அமைதியா இருக்கும்படி கோரியதுடன் ஆத்திரமடைந்த மக்களை அமைதிப்படுத்தினார்.

ஜனநாயக ரீதியில் தாம் போராட்டத்தை மேற்கொள்ளும் போது தமக்கு புலி முத்திரைக் குத்துவதற்காக இவ்வாறான ஏற்றுக்கொள்ள முடியாத நாசகார செயல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் செல்வராஜ கஜேந்திரன் குறிப்பிட்டார்.

பொலிஸார் முன்னிலையில் இந்தப் புலி கொடி நபர்கள் வலவந்ததும், அதனை பொலிஸார் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்ததும் இது அரசாங்கத்தின் புலனாய்வாளர்கள் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது.

உள்ளுர் ஊடகங்களில் வெளியிடப்பட்ட சில புகைப்படங்கள் இதனைத் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணைந்து கடந்த மே தினக் கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்திய சந்தர்ப்பத்திலும் இவ்வாறானதொரு சம்பவம் பதிவாகியது.

அடிக்கொரு இராணுவம் நிறுத்தப்பட்டிருந்த வீதியில் புலிக் கொடி நபர்களை இராணுவம் கண்டுகொள்ளாதும், இந்தக் காட்சிகள் அரச தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்களின் கண்களில் மட்டும் சிக்கியதும் இது அரசாங்கத்தின் திட்டமிட்ட வேலை என்பதை அம்பலப்படுத்தியது.

இன்றைய தினமும்,ஊடகவியலாளர்களின் புகைப்படங்களும், சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியங்களும் நெல்லியடி ஆர்ப்பாட்டத்தைக் குழப்புவதற்கு அரச தரப்பே புலிக்கொடி நபர்களை ஏற்பாடு செய்துள்ளதைப் புலப்படுத்தியுள்ளது.