துரைராஜசிங்கத்தின் வீட்டு வாயில் கதவு சங்கிலிகளால் பூட்டி அடைப்பு – (படங்கள் இணைப்பு)

July 18, 2012 0
துரைராஜசிங்கத்தின் வீட்டு வாயில் கதவு சங்கிலிகளால் பூட்டி அடைப்பு – (படங்கள் இணைப்பு)

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் கே.துரைராசசிங்கம் அவர்களின் வீட்டின் வாயில் கதவு அரச ஆதரவு நாசகாரிகளால் வெளியில் செல்லாமல் அடாவடித்தனமாக சங்கிலியால் அடைக்கப்பட்டுள்ளது.

பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிசார் சங்கிலியை உடைத்து வாயில் கதவை திறந்ததாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கும் அதேவேளை இம் மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களையும் மிரட்டும் தொனியில் இலங்கை அரசும் துணை ஆயுதக் குழுக்கள் மிரட்டும் தன்மையே தொடர்ந்த வண்னமாய் உள்ளது.

பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் இணைந்த தாயகம் சுயநிர்ணயம் என பல தரப்பட்ட வினாக்களுக்கு விடை கிடைக்கும் அத்துடன் எதிரியையும் துரோகியையும் எம் தேசம் துரத்தும் நாள் அண்மித்து விட்டதை உணர்ந்தவர்களே இவ்வாறான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.

இதற்கு அஞ்சுவதற்கு நாம் கோழைகளல்ல என பெயர் குறிப்பிட விரும்பாத வேட்பாளர் தெரிவித்ததுடன் பொலிசார் விசாரனை ஆரம்பித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இரண்டாம் இணைப்பு

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைராஜசிங்கம் மற்றும் ரெலோ பிரசன்னா இந்திரகுமார் ஆகியோரின் வீடுகளின் வாயிற் கதவுகள் நேற்று அதிகாலை சங்கிலிகள் பிணைக்கப்பட்ட நிலையில் பூட்டுகளால் பூட்டப்பட்டிருந்தன.

இதனையடுத்து பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து துரைராஜசிங்கத்தின் வீட்டுக்கு வந்த பொலிஸார் பூட்டுகளை உடைத்து கதவினைத் திறந்து விட்டனர்.

இரவு படுக்கைக்குச் சென்ற பின்னர் வாயிற் கதவு பூட்டிடப்பட்டமையினால் காலை 8.30க்குப் பின்னரே வெளியில் வர முடிந்தமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதி-2ல் அமைந்துள்ள துரைராஜசிங்கத்தின் வீடு பூட்டுகளால் பூட்டப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டத்தரணியும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான க.துரைராஜசிங்கம் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தலைமை வேட்பாளராகப் போட்டியிடவுள்ளார்.

தேர்தலில் போட்டியிடவுள்ளமையைக் குழப்பும் நோக்கில் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜனநாயகம் ஏற்பட்டுவிட்டதாக கூறப்படுவது இவ்வாறு தானா எனக் கேள்வி எழுப்பினார்.

இவரது வீடு கிழக்கு மாகாண முதலமைச்சரின் மட்டக்களப்பு வாசஸ்தலத்திற்கு அருகில் அமைந்துள்ளது.

துரைராஜசிங்கத்தின் வீட்டுக்கு பூட்டிடப்பட்டமை குறித்து கருத்துத் தெரிவித்த முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம்,

நாட்டில் ஜனநாயகம் ஏற்பட்டு விட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கு தடைகளே ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

அண்மையில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது மாநாட்டு வேளையிலும் இவர் மீது பல அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடும் கிழக்குத் தலைமைகள் மக்களால் நிராகரிக்கப்படுவார்கள்.

எனவே தமிழ் மக்கள் அவதானத்துடன் தேர்தல் தொடர்பாகச் செயற்பட வேண்டும் என்பதுடன், வேட்பாளர்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பும் மக்களுக்குள்ளது.

இதற்கு சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாலும், அது மந்த கதியிலேயே நடைபெறும், எனவே இதனைக் கருத்தில் கொண்டு விரைவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.