ஆளும் கூட்டணிக்கு மற்றொரு அடி

July 18, 2012 0
ஆளும் கூட்டணிக்கு மற்றொரு அடி

கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் சிறிலங்காவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவித்திருந்த, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திடீரென தனது முடிவை மாற்றிக் கொண்டு தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரான ரவூப் ஹக்கீம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் போட்டியிடவுள்ளது.

அதேவேளை, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் நட்பான முறையிலேயே தேர்தல் நடவடிக்கைகள் இடம்பெறும் என்றும் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியுள்ளார்.

முன்னதாக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவது என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர்மட்டக்குழு தீர்மானித்திருந்தது.

ஆனால், வேட்பாளர்களுக்கு இடம்ஒதுக்குவதில் ஏற்பட்ட பிரச்சினையால் இந்த முடிவுக்கு வந்துள்ளது.

12 வேட்பாளர்களுக்குப் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியிருந்தது.

ஆனால், 10 வேட்பாளர்களுக்கே அனுமதி வழங்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முன்வந்தது.

இதையடுத்தே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில், தனித்துப் போட்டியிடும் முடிவை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளது.

நாளை நண்பகலுக்கு முன்னர் வேட்பாளர் பட்டியல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற நிலையில், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் தீவிரமாக இறங்கியுள்ளது.

அதேவேளை, கிழக்கு மாகாணசபைத் தேர்தலுக்குப் பின்னர், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து ஆட்சியமைக்கப் போவதாகவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட எடுத்துள்ள முடிவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்,

“சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடம் எடுத்துள்ள முடிவை நாம் வரவேற்கின்றோம்.

இறுதியாக ஏமாற்றப்படாமல், இப்போதே அவர்கள் புத்திசாலித்தனமான முடிவை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

வடக்கு, கிழக்கின் தமிழ் பேசும் மக்களின் எதிர்காலத்துக்கு இந்த முடிவு சிறப்பாக அமையுமென நாம் நம்புகிறோம்.

தமிழ் பேசும் மக்களை மதிக்காத, அவர்களது உணர்வுகளைப் புரிந்துகொள்ளாத சிறிலங்கா அரசாங்கத்துக்கு துணைபோகாமல் இருப்பதென்று சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவை நாங்கள் மிகவும் வரவேற்கிறோம்’ என்று கூறியுள்ளார்.