யுத்தத்திற்குப் பின்னதான புனர்வாழ்வு நல்லிணக்கம் என்பவற்றில் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார். நாட்டில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த யுத்தத்தின் பின்னரான புனர்வாழ்வு சவால்களை அரசாங்கம் வெற்றிகொள்ள வேண்டுமென குறிப்பிட்டுள்ளார். அண்மையில் வடக்கிற்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போதல் சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் விசாரணை நடத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படவேண்டுமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் மக்கள் இயல்பு வாழ்க்கையை முன்னெடுப்பதில் தடைகள் ஏற்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சில மக்கள் தொடர்ந்தும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருவதனை அவதானிக்க முடிவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பல தசாப்தங்களாகவே காணிப் பிரச்சினைகளுக்கு காத்திரமான தீர்வுகள் முன்வைக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அன்புக்குரியவர்களுக்கு என்னவாயிற்று என பலருக்குதெரியாத நிலைமை நீடிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். பெண் குடும்பத் தலைவிகள் சவால்களை எதிர்நோக்கிவருவதாகத் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்க முனைப்புக்களை தொடர்ச்சியாக மேற்கொள்வதன் மூலம் யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட முடியும் என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் சமாதானத்தையும் சுபீட்சத்தையும் நிலைநாட்ட பிரித்தானிய தொடர்ச்சியாக ஒத்துழைப்புக்களை வழங்கும் என ஜோன் ரான்கீன் தெரிவித்துள்ளார்.








