முன்னாள் போராளிகளுக்கு அடையாளஅட்டை வழங்க அனைத்துலக அமைப்புக்கு தடை

June 25, 2012 0
முன்னாள் போராளிகளுக்கு அடையாளஅட்டை வழங்க அனைத்துலக அமைப்புக்கு தடை

சிறிலங்கா அரசின் புனர்வாழ்வு முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளுக்கு ஐஓஎம் என்று அழைக்கப்படும் புலம்பெயர்ந்தோருக்கான அனைத்துலக அமைப்பு வழங்கி வந்த அடையாள அட்டை விநியோகத்தை நிறுத்துமாறு சிறிலங்கா அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து இந்த அடையாள அட்டைகளை வழங்கும் பணியை ஐஓஎம் அமைப்பு நிறுத்தியுள்ளது.

அதேவேளை, கூட்டுப் படைகளின் தலைமைத் தளபதியின் பணிப்பின் பேரில், முன்னாள் போராளிகளுக்கு ஐஓம் அமைப்பு வழங்கிய அடையாள அட்டைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் சிறிலங்கா இராணுவம் ஈடுபட்டு வருகிறது.

சிறிலங்கா இராணுவத்தினரின் இந்த நடவடிக்கை முன்னாள் போராளிகளிடையே சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் வசதிக்காகவே ஐஓம் அமைப்பு இந்த அடையாள அட்டைகளை வழங்கியிருந்தது.

இதனிடையே சிறிலங்கா இராணுவத்தின் இந்த நடவடிக்கையை சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நியாயப்படுத்தியுள்ளார்.

“புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் சமூகத்தின் எந்தப் பகுதியினருடனும் பாகுபாடு காட்டப்படுவதையும், அவர்கள் முத்திரை குத்தப்படுவதையும் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு பெற்றவர்களை சிறிலங்கா அரசாங்கம் சமூகத்தின் ஒரு பகுதியாகவே பார்க்கிறது.

அவர்களை தனியான குழுவாக பிரித்து நடத்த விரும்பவில்லை.“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவுளை இது குறித்த கருத்து வெளியிட்டுள்ள ஐஓஎம் அமைப்பின் சிறிலங்காவுக்கான குழுவின் தலைவர் றிச்சர்ட் டன்சிகர்,

“நான் சந்தித்த பெரும்பாலானவர்கள், இந்த அடையாள அட்டைகள் தமக்கு மேலதிக பாதுகாப்பைத் தருவதாக உணர்வதாக கூறினர்.

இன்னொரு பக்கத்தின் சிறிலங்கா அரசின் நிலைப்பாட்டை புரிந்து கொள்கிறேன்.

இருந்தாலும், இந்த அடையாள அட்டை முன்னாள் போராளிகளுக்கு உதவியாக இருக்கும் என்றே நம்புகிறேன்.“ என்று கூறியுள்ளார்.

அதேவேளை முன்னாள் போராளியான பரமசிவம் அன்ரனி நியூட்டன், இந்த ஐஓஎம் அடையாள தமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.